PUBLISHED ON : ஆக 31, 2025 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: எங்கள் கூட்டணி, வரும் டிசம்பரில் தான் இறுதியாகும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மன வருத்தத்தோடு, பா.ஜ., கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளார். டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்கள், அவரை சமாதானப்படுத்தி, மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வருவது நல்லது.
டவுட் தனபாலு: பன்னீர்செல்வம் என்ற அமைதியான, அடக்கமான தனி மனிதரை விட, அவர் பின்னாடி எத்தனை லட்சம் பேர் இருக்காங்க என்று தான், பா.ஜ., மேலிடம் பார்க்கும்... அந்த வகையில், பன்னீர்செல்வம் அணியின் துாணாக இருந்து துரும்பாக இளைச்சு போயிட்டதால, டில்லி தலைவர்கள் இல்ல... தமிழக பா.ஜ., தலைவர்கள் கூட அவரை திரும்பி பார்ப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கடந்த, 2021 செப்டம்பரில், புதுக்கோட்டை மாவட்டம், துடையூர் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை வெள்ளத்தில் மூழ்கி, அரசு பெண் டாக்டர் சத்யா இறந்தார். அதே ஆண்டு டிசம்பரில், மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டர் கார்த்திகேயன், அரசு பஸ் மோதி உயிரிழந்தார். இவர்களுக்கு இன்றுவரை நிவாரண தொகை வழங்காத தி.மு.க., அரசு, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது.
டவுட் தனபாலு: கள்ளச்சாராய பலிகள் என்பது, முழுக்க முழுக்க அரசின் தோல்வி... இன்னும் சொல்லப் போனா, காவல் துறையை நிர்வகிக்கும் முதல்வருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட தோல்வி... அதை மறைக்கவே, 10 லட்சத்தை துாக்கி கொடுத்து, விமர்சிப்பவர்களின் வாயை அடைச்சாங்க... அதனால, அரசு டாக்டர்கள் இறப்பை எல்லாம் ஆட்சியாளர்கள் கண்டுக்க மாட் டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து, சிலர் கேள்வி எழுப்புகின்றனர். துாங்குபவர்களை எழுப்பலாம்; துாங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து, தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளிப்பர்.
டவுட் தனபாலு: அது சரி... நுாற்றுக்கு, 100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி யிருந்தால் தான், அடிச்சு சொல்லி யிருப்பீங்களே... அது முடியாமல் தானே, ஆளுங்கட்சிக்கு பி.ஆர்.ஓ., வேலை பார்க்க நியமிக்கப்பட்டிருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நோக்கி கையை காட்டுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!