PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா: திருப்பதி திருமலை கோவிலில் சமீபத்தில் நான் சுவாமி தரிசனம் செய்தபோது, நான் அணிந்திருந்த நகைகள் குறித்து, சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்துள்ளனர். தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும் அதன் மதிப்பு குறைவதில்லை. விமர்சியுங்கள், ஆராயுங்கள். என் வார்த்தைகளை பிரித்து பார்க்கலாம்; என் தன்னம்பிக்கையை பிரித்து பார்க்க முடியாது. என் தங்கத் தை சோதிக்கலாம்; என் துணிச்சலை சோதிக்க முடியாது.
டவுட் தனபாலு: அரசியலில் எல்லா விமர்சனங்களுக்கும் பதில் தரணும்னு நினைச்சிட்டு இருந்தா, உங்க அமைச்சர் வேலையை பார்க்க நேரமிருக்குமா என்பது, ‘டவுட்’ தான்... அதனால, உங்க துறையின் சார்பில் நிறைய தொழில் முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே விமர்சனங்களுக்கு சரியான பதிலடியாக அமையும் என்பதிலும், ‘டவுட்’டே இல்லை!
lll
த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ்: வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் சோப்பு, ஷாம்பு கலந்து ஆற்றில் கலப்பதால் வெள்ளை நுரை வருகிறது. மழைக் காலத்தில் உயரமான இடத்தில் இருந்து தாழ்வான இடத்தில் தண்ணீர் விழும்போதும் நுரை உருவாகும்.
டவுட் தனபாலு: தி.மு.க., அரசும் இதைத் தான் சொன்னது... அ.தி.மு.க., அரசும் இதைத் தான் சொன்னது... ஆனால், மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் இத்தகைய ஆறுகளைச் சுத்தமாக்கி, துாய்மையான குடிநீரை வழங்கும் வகையில் சீரமைத்தால், த.வெ.க., அரசை மக்கள், தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்குவர் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
த.மா.கா., தலைவர் வாசன்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் உரிய விசாரணை, ஆதாரங்களின் அடிப்படையில் தான், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் இது போன்ற ஊழல்கள், வரும் காலங்களில் நடக்காமல் தடுக்க முடியும்.
டவுட் தனபாலு: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது குறித்து தான் நீங்க கருத்து சொல்றீங்க என்பது, ‘டவுட்’ இல்லாம தெரியுது... அதேநேரம், இது தி.மு.க.,வுக்கு ஆதரவான கருத்தா அல்லது த.வெ.க.,வுக்கு ஆதரவான கருத்தா என்ற, ‘டவுட்’டும் சேர்ந்தே வருது!
lll
