/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது 'தினமலர்'
/
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது 'தினமலர்'
PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM

வாசிக்கும் பழக்கத்தை என்னுள் உருவாக்கியது 'தினமலர்' நாளிதழ் என்றால் அது மிகையில்லை. உலகம், இந்தியா, தமிழ்நாடு என அனைத்துப் பகுதிகளில் நடந்தேறிய, நடந்து கொண்டிருக்கும். நடக்கப்போகும் அனைத்துச் செய்திகளையும் உடனுக்குடன் உண்மையாகத் தருவதில் முன்னிலையில் உள்ள தினமலர் நாளிதழை, நான் கடந்த 30 வருடங்களாக வாசித்து வருகிறேன்.
இன்றைய சூழலில் பத்திரிகை நடத்துவதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மை 'தினமலர்' எல்லாத் தடைகளையும் தாண்டி வீறுநடை போட்டு, இன்றளவும் முதன்மை நாளிதழாக இருப்பதென்பது. ஒரு நாளிதழ் கடைநிலை ஊழியர் வரையும், வெகுஜன மக்களையும் சென்றடைய வேண்டும் என்பது பத்திரிகை தர்மம். அதைக் கருத்தில் கொண்டே தினமலர் அனைத்துத் தரப்பினரையும் வாசிக்கத்துாண்டும் மலராக மணம் வீசுகிறது. எதார்த்தமான நடை, எளிய சொற்கள், கவரக்கூடிய தலைப்புகள், உயரிய தலையங்கம் என தன்னை மெருகேற்றிக்கொள்ளும் வண்ணம், தினந்தோறும் புதுமையாய் பூக்கிறது இந்த மலர். திருக்குறளைப் போல தெளிவும் கருத்தும் ஒன்றிணைந்த மலராக உள்ளது. எந்தவிதமான செய்தியாக இருந்தாலும், வாசிப்போரின் எண்ணங்களில் பதியம் போடும் வகையில் தினமலர் வெளிவருகிறது.
நான், கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிர்வகிப்பதால், கல்வி சம்பந்தமான செய்திகளை தினமலர் நாளிதழ் அதிகம் வாசிப்பதுண்டு. அவ்வகையில், பட்டம், கல்வி மலர் உள்ளிட்ட பகுதிகளோடு, கல்வி சம்பந்தமான உயர்ந்த செய்திகளையும் நிகழ்வுகளையும் தந்து, மாணவர்களின் கல்விக்கான கலங்கரை விளக்கமாக திகழ்கிறது தினமலர்.
தினமலர் புகைப்படங்களை தனியாக குறிப்பிட வேண்டும். முக்கிய நிகழ்வுகளை பற்றிய படங்கள், தெளிவாகவும் சொற்கள் இல்லாமலே புரிந்து கொள்ளும் வகையிலும் நம்மை அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கே கொண்டு செல்லும் அளவிற்கும் இடம்பெற்றிருக்கும்.
சுதந்திர போராட்ட காலத்தில் துவங்கப்பட்ட பத்திரிகைகள் அனைத்தும், 'இந்திய விடுதலை' என்பதை தங்கள் லட்சியமாக கொண்டிருந்தன. சுதந்திரத்திற்கு பின் தொடங்கப்பட்ட 'தினமலர்', தேசிய ஒருமைப்பாடு, தேச வளர்ச்சி என்பனவற்றை தன் லட்சியமாக கொண்டுள்ளது. அந்த உயரிய லட்சியங்களோடு பணியாற்றும் தினமலர் புதுமைக்கு புதுமையாய், பண்பாட்டுக் கலாசாரத்தில் முதன்மையாய் தொடர்ந்து திகழ்ந்து வருவது, பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் உரியது மட்டும் அல்ல; அதனை முதன்மை இடத்திற்கு தகுதி பெற செய்வதும் அதுவே. இந்த 75ம் ஆண்டில், தினமலர், இன்னும் பல படிகள் முன்னேறி, சமூகத்திற்கு தொண்டாற்றி, மேன்மேலும் வளர வேலம்மாள் கல்வி நிறுவனங்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
எம்.வி.எம். வேல்முருகன்
முதன்மை செயல் அதிகாரி வேலம்மாள் கல்வி நிறுவனங்கள்

