PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM

'இந்த காலத்தில் இப்படி ஒரு அரசியல்வாதியா...' என, தெலுங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மீனாட்சி நடராஜன் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள காங்., தொண்டர்கள்.
மீனாட்சி நடராஜன், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் தீவிர ஆதரவாளர். ஒரே ஒரு முறை, மத்திய பிரதேசத்தில் இருந்து காங்., சார்பில், லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்; அதன்பின், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மீனாட்சி நடராஜன் தற்போது தெலுங்கானா காங்., மேலிட பொறுப்பாளராக இருப்பதால், அடிக்கடி ம.பி.,யில் இருந்து தெலுங்கானாவுக்கு சென்று வருகிறார்.
மிக அத்தியாவசியமான நேரத்தை தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் ரயிலில் தான் பயணிக்கிறார். தோளில் ஒரு ஜோல்னா பை, ரப்பர் செருப்பு, சரியாக வாரப்படாத தலைமுடி, சோடாப்புட்டி கண்ணாடி என, தெலுங்கானா, ம.பி., மாநிலங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் இவரை அடிக்கடி பார்க்க முடியும்.
சில நேரங்களில், இவரை அடையாளம் கண்டுகொள்ளும் கட்சி நிர்வாகிகள், 'நீங்கள் ஏன் ரயிலில் பயணிக்கிறீர்கள்; விமானத்தில் செல்லலாமே...' என கேட்பது உண்டு.
அதற்கு, 'நீங்களும் ரயிலில் பயணித்து பழகுங்கள். செலவும் மிச்சம்; நல்ல அனுபவமும் கிடைக்கும்...' என அறிவுரை கூறுவார்.
'வார்டு கவுன்சிலராக இருப்பவரே, சொகுசு காரில் பயணிக்கும் போது, இவர் எளிமையாக இருப்பது ஆச்சரியம் தான். இப்படிப்பட்டவருக்கு கட்சி முக்கிய பதவி கொடுக்காதது ஏன்...?' என, கேள்வி எழுப்புகின்றனர், காங்கிரஸ் தொண்டர்கள்.

