PUBLISHED ON : ஜன 06, 2026 01:34 AM

'தங்களுக்கு சாதகமாக நடக்கவில்லை என்பதற்காக, ஒரு அதிகாரியை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாமா...' என, திரிணமுல் காங்கிரஸ் பொதுச்செயலர் அபிஷேக் பானர்ஜி குறித்து, கோபத்துடன் கூறுகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள போலி வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களை நீக்கும் முயற்சியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுதும், 24 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமை உள்ளிட்ட விபரங்கள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக கூறி, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, வாக்காளர் களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வாக்காளர் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால், அபிஷேக் பானர்ஜி எரிச்சல் அடைந்துள்ளார். மேலும், 'தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் ஒரு மந்திரவாதி. அவரால், உயிருடன் இருப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து மறையச் செய்யவும், இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரவும் முடியும்...' என, கடுமையாக விமர்சித்துள்ளார்.
பா.ஜ.,வினரோ, 'சட்டவிரோத குடியேறிகளுக்கு, அபிஷேக் பானர்ஜி வக்காலத்து வாங்குவது ஏன்...?' என, கிண்டல் அடிக்கின்றனர்.

