PUBLISHED ON : அக் 09, 2024 12:00 AM

'போட்டியே இருக்காது என நினைத்தால், புது ஆளை களத்தில் இறக்கி விடுகின்றனரே...' என, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின்ஆதரவாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் அமேதியில்ராகுலை தோற்கடித்து,பா.ஜ., மேலிடத்தின்செல்லப் பிள்ளையாக உருவெடுத்தார், ஸ்மிருதி இரானி. மத்திய அமைச்சராகவும், எம்.பி.,யாகவும் பார்லிமென்டில்சிறப்பாக செயல்பட்டார்.
ஆனால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார். ஆனாலும், ராஜ்யசபா எம்.பி.,யாகி, மீண்டும் மத்திய அமைச்சராவார் என, எதிர்பார்ப்பு எழுந்தது; ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதையடுத்து, அடுத்தாண்டு ஜனவரியில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள டில்லி மீது ஸ்மிருதியின் கவனம் திரும்பியுள்ளது. டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்றால் முதல்வராகி விடலாம்என்பது இவரது கணக்கு. இதற்காக, டில்லியில்கட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தான், முன்னாள் மத்திய அமைச்சரான, மறைந்த சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க,பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. பன்சூரி சுவராஜ், டில்லியை சேர்ந்தவர் என்பது, அவருக்கு கூடுதல் தகுதியாக கருதப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்ட ஸ்மிருதியின் ஆதரவாளர்கள், 'இது என்ன புது தலைவலி...' என, புலம்புகின்றனர்.

