PUBLISHED ON : பிப் 09, 2025 12:00 AM

'எதிர்க்கட்சியினரின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாவதே இவருக்கு வேலையாகி விட்டது...' என, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா பற்றி கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
சித்தராமையா, பா.ஜ.,வை கடுமையாக விமர்சிப்பவர்; போகிற போக்கில் ஹிந்து மதத்தையும் விமர்சிப்பார். ஆனால், 'பா.ஜ., கொள்கைகளைத் தான் விமர்சிக்கிறேன்; ஹிந்து மதத்தை ஒருபோதும் விமர்சிப்பது இல்லை...' என, அடிக்கடி விளக்கம் கொடுப்பார்.
சமீபத்தில், கர்நாடகாவின் பெலகாவியில் மஹாத்மா காந்தி பெயரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சித்தராமையா பங்கேற்றார். அதில் பேசிய சித்தராமையா, 'பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., காரர்களுக்கு காந்தியை பிடிக்காது. அவரை, ஹிந்துக்களுக்கு எதிரானவராக சித்தரித்தனர். அதுபோலத் தான் என்னையும் ஹிந்து விரோதியாக சித்தரிக்கின்றனர். காந்தி சுடப்பட்டபோது, ஸ்ரீ ராமா... ஸ்ரீ ராமா... என்ற வார்த்தையைத் தான் உச்சரித்தார்...' என்றார்.
உடனடியாக கூட்டத்தில் இருந்தவர்கள், 'காந்தி, ஸ்ரீ ராமா என உச்சரிக்கவில்லை; ஹே ராம் என்ற வார்த்தையைத் தான் உச்சரித்தார்...' என, சத்தமாக கூறினர்.
இதையடுத்து சுதாரித்த சித்தராமையா, 'சரி சரி... எப்படியோ, ராம நாமத்தை தானே உச்சரித்தார்...' என, சமாளித்தபடி பேச்சை முடித்தார்.
அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினரோ, 'நம் தலைவருக்கு வாய் சாமர்த்தியம் மட்டும் இல்லை என்றால், அரசியலில் இத்தனை காலம் நீடித்திருக்க முடியாது...' என்றனர்.

