PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

'மூத்த தலைவர்களை வலை வீசி தேடத் துவங்கி விட்டாரே...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் கேரள பிரமுகர்கள்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது; இங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
தொடர்ந்து, இரண்டு தேர்தல்களில் தோல்வியை சந்தித்த காங்கிரஸ், இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது; இதற்கான வேலைகளை காங்., - எம்.பி., ராகுல் துவக்கியுள்ளார்.
சமீபத்தில் திருவனந்த புரம் வந்த ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.அந்தோணியை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். அந்தோணிக்கு, 87 வயதாகி விட்டதால், தீவிர அரசியலில் இருந்து விலகி, வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் டில்லிக்கே செல்லவில்லை. இந்த நிலையில், அந்தோணியை சந்தித்து தேர்தல் வியூகம் குறித்து ராகுல் விவாதித்தது, கேரள அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
'வழக்கமாக மூத்த தலைவர்களை ராகுல் பொருட்படுத்த மாட்டார். ஆனால், அந்தோணியை சந்தித்தது ஆச்சரியமாக உள்ளது...' என்கின்றனர், காங்., தலைவர்கள்.
பா.ஜ.,வினரோ, 'அந்தோணியின் மகனே, பா.ஜ.,வில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், ராகுல், அவரை சந்தித்தால் என்ன... சந்திக்காவிட்டால் என்ன...' என, கிண்டல் அடிக்கின்றனர்.