PUBLISHED ON : நவ 01, 2025 12:00 AM

'தேர்தல் வரப் போகிறது அல்லவா; இனி இதுபோன்ற விஷயங்கள் அதிகம் நடக்கும்...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் நடவடிக்கையை விமர்சிக்கின்றனர், அங்குள்ள எதிர்க்கட்சியினர்.
மேற்கு வங்கத்தில், அடுத்தாண்டு மத்தியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக ஆட்சி அமைக்க தயாராகி வருகிறார், மம்தா பானர்ஜி.
ஆனால், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், 'மம்தா பானர்ஜி, சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்காக, பெரும்பான்மை சமூகத்தினர் மீது ஓரவஞ்சனையாக செயல்படுகிறார்...' என, தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர்.
துவக்கத்தில் இதை அலட்சியப்படுத்திய மம்தாவுக்கு, இப்போது தேர்தல் நெருங்குவதால் பயம் வந்து விட்டது. இதையடுத்து, ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, மேற்கு வங்கத்தின் திகா நகரில், பிரமாண்டமான ஜெகன்னாதர் கோவிலை சில மாதங்களுக்கு முன் கட்டினார்.
இப்போது, மேற்கு வங்கத்தின் மற்றொரு முக்கிய நகரான சிலிகுரியில், சிவன் கோவிலை கட்டப்போவதாக அறிவித்துள்ளர். இந்த கோவிலில், உலகின் மிகப்பெரிய சிவன் சிலையை நிறுவப் போவதாகவும் தெரிவித்துள்ளார்; இது, மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.,வினரோ, 'தேர்தலுக்காக மம்தா நடத்தும் நாடகம், ஹிந்துக்களுக்கு நன்றாக புரியும். அவரது நடவடிக்கைகளை பார்த்து ஹிந்துக்கள் ஏமாற மாட்டார்கள்...' என்கின்றனர்.

