PUBLISHED ON : ஆக 27, 2026 12:00 AM

'சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல; வி.வி.ஐ.பி.,க்களுக்கும், மலரும் நினைவுகளை அசைபோடுவது ஒரு சுகம் தான்...' என்கின்றனர், தெலுங்கானா மாநில மக்கள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
மாநிலத்தில் பருவமழை பொய்க்காமல் பெய்ய வேண்டி, நலகொண்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாகார்ஜுனா சாகர் அணையில், சமீபத்தில் பிரமாண்ட யாகத்துக்கு மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது.
மாநிலம் முழுதும் இருந்து வந்திருந்த 108 வேத பண்டிதர்கள் முன்னிலையில், 'மஹா வருண யாகம்' நடந்தது. இதில், முதல்வர் ரேவந்த் ரெட்டி, தன் மனைவி கீதாவுடன் கலந்து கொண்டார்.
யாகம் முடிந்ததும், அணையின் பல இடங்களில் நின்று ரேவந்த் ரெட்டியும், அவரது மனைவியும் விதம் விதமாக புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
இது குறித்து, அங்கு வந்திருந்த அதிகாரிகள் சிலர், ரேவந்த் ரெட்டியிடம் கேட்டபோது, 'கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இந்த அணை பகுதியில் தான், என் மனைவியை முதன் முதலில் சந்தித்தேன். இங்கு தான் இருவரும் காதலில் விழுந்தோம். இங்கு வந்ததும், பழைய நினைவுகள் மீண்டும் மனதில் அலையடிக்கத் துவங்கி விட்டன. அதனால் தான் புகைப்படம் எடுத்தோம்...' என்றார்.
தெலுங்கானா மக்களோ, 'இந்த அணையின் பின்னணியில், இப்படி ஒரு காதல் கதை இருக்கிறதா...? இதை அருமையான சினிமாவாக எடுக்கலாமே' என கூறி சிரிக்கின்றனர்.
