PUBLISHED ON : ஜன 30, 2026 04:18 AM

'காலம் கடந்து விட்டாலும், இப்போதாவது அவருக்கு யோசனை வந்ததே... அதுவே பெரிய விஷயம்...' என, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவரும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான குமாரசாமி பற்றி பேசுகின்றனர், அந்த கட்சி நிர்வாகிகள்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, இங்கு செல்வாக்கான கட்சியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் இருந்தது.
இந்த கட்சி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவால் நிறுவப்பட்டது. தேவ கவுடாவின் இளைய மகன்தான், குமாரசாமி. காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து, ஆட்சி அதிகாரத்தை ருசி பார்த்த மதச்சார்பற்ற ஜனதா தளம், கடந்த சில தேர்தல்களில், தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
கர்நாடகாவின், ஹாசன், துமகூரு, மைசூரு, கோலார், சிக்கபல்லாபூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே, தற்போது இந்த கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. குமாரசாமி மத்திய அமைச்சராக இருப்பதால், டில்லியில் தான் அதிக நாட்கள் செலவிடுகிறார்; இது, அந்த கட்சி நிர்வாகிகளிடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது.
'இந்த நிலை தொடர்ந்தால், கட்சி காணாமல் போய் விடும்...' என, மூத்த நிர்வாகிகள், குமாரசாமியை எச்சரித்துள்ளனர். முதலுக்கே மோசமாகும் சூழல் ஏற் பட்டிருப்பதால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்புவது குறித்து யோசித்து வருகிறார், குமாரசாமி.

