PUBLISHED ON : நவ 13, 2025 12:00 AM

'இந்த பிரச்னை எப்போது தான் முடிவுக்கு வரும் என தெரியவில்லையே... நாம் சொல்வதை அவரும் கேட்க மறுக்கிறார். அவரை கட்சியை விட்டு நீக்கவும் தலைவர்கள் மறுக்கின்றனர்; என்ன செய்யலாம்...' என, தங்கள் கட்சி எம்.பி., சசி தரூரை நினைத்து புலம்புகின்றனர், காங்கிரஸ் கட்சியினர்.
கேரளாவைச் சேர்ந்த சசி தரூர், ஐ.நா.,வில் உயரதிகாரியாக பணியாற்றியவர். ஓய்வுக்கு பின், அரசியலுக்கு வந்த அவர், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில், அமைச்சராகவும் இருந்தார்.
தற்போது கேரள மாநிலம் திருவனந்த புரம் தொகுதி எம்.பி., யாக உள்ளார். சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய பா.ஜ., அரசையும் பாராட்டி பேசி வருகிறார், சசி தரூர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பா.ஜ., மூத்த தலைவரான அத்வானியை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார், சசி தரூர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும், சசி தரூரை கடுமையாக விமர்சித்தனர். அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என, கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் சசி தரூரோ, அத்வானியை, முன்னாள் பிரதமர்களும், காங்கிரஸ் தலைவர்களுமான, மறைந்த ஜவஹர்லால் நேரு, இந்திரா ஆகியோருடன் ஒப்பிட்டு, 'சில கசப்பான சம்பவங்களுக்காக, அத்வானியின் ஒட்டு மொத்த அரசியல் வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்க முடியாது. அவருக்கு உரிய மரியாதையை தர வேண்டும்...' என்றார்.
இதனால் கடுப்பான காங்., தலைவர்கள், 'இவர், அடங்க மாட்டேங்கிறாரே...' என, புலம்புகின்றனர்.

