PUBLISHED ON : செப் 26, 2026 01:30 AM

'அதெப்படி, டில்லியை ஆட்சி செய்பவர்களுக்கு ஒரே மாதிரி சிந்தனை வருகிறது...?' என, டில்லி அரசின் பா.ஜ., முதல்வரான ரேகா குப்தாவை கிண்டல் அடிக்கின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
டில்லியை மிகவும் பிரமாண்டமாக கட்டமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார், ரேகா குப்தா. இதன்படி, நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து, டில்லிக்குள் நுழையும் ஒவ்வொரு இடத்திலும், பிரமாண்டமான தோரணவாயிலுடன் கூடிய, 13 நுழைவாயில்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அசோக சக்கரத்துடன் கூடிய பிரமாண்ட துாண்களும் இங்கு அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து, டில்லியில் உள்ள சில மூத்த அரசியல்வாதிகள் கூறுகையில், 'ஒரு காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகலாய மன்னனான ஷாஜஹான், தன் பெயரிலேயே ஷாஜஹானாபாத் என்ற தலைநகரத்தை நிர்மாணித்தார். தற்போதுள்ள பழைய டில்லி நகரப் பகுதியில் தான் இந்த ஷாஜஹானாபாத் இருந்தது.
'இதன் எல்லைப் பகுதியில், 14 நுழைவாயில்களையும் அமைத்தார். இவற்றில் ஐந்து மட்டுமே தற்போது உள்ளன; மற்றவை எல்லாம், காலச்சக்கரத்தின் சுழற்சியில் காணாமல் போய் விட்டன. இப்போது டில்லியின் முதல்வராக உள்ள ரேகா குப்தாவுக்கும், இதே போன்ற நுழைவாயில்களை அமைக்கும் எண்ணம் எப்படி வந்தது என தெரியவில்லை...' என்கின்றனர்.
ரேகா குப்தாவின் ஆதரவாளர்களோ, 'வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒப்பிட்டு பார்ப்பர். எங்களுக்கு ஏராளமான வேலைகள் இருக்கின்றன...' என, பதிலடி கொடுக்கின்றனர்.
