PUBLISHED ON : ஜூன் 09, 2026 12:00 AM

'குடும்பத்துடன் சிறையில் தள்ளி, களி தின்ன வைத்து விடுவர் போலிருக்கிறதே...' என கவலைப்படுகிறார், கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கேரளாவில், முதல்வர் சதீசன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், பினராயி விஜயன் முதல்வராக பதவி வகித்தார்.
அப்போது, கொச்சி கனிமவள நிறுவனம் சார்பில், பினராயி விஜயனின் மகள் வீணா நடத்தும் தனியார் நிறுவனத்துக்கு, 1.72 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து, அமலாக்கத்துறை ஏற்கனவே வீணா மீது வழக்கு பதிவு செய்திருந்தது. ஆனால், மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
சமீபத்தில் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை மீண்டும் களத்தில் இறங்கியது. வீணாவின் வீடு மட்டுமல்லாமல், பினராயி விஜயனின் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அதிரடி காட்டியது.
இதையடுத்து, வீணா மீது நடவடிக்கை எடுக்க தடை கோரிய மனுவையும், கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், அதிர்ந்து போயுள்ள பினராயி விஜயன், 'என் மகளை மட்டுமல்லாமல், என்னையும் வழக்கில் சேர்த்து, 'உள்ளே' தள்ள சதி திட்டம் தீட்டியுள்ளனர். அதற்காகத் தான், அமலாக்கத்துறையை வைத்து எனக்கு தொல்லை கொடுக்கின்றனர்...' என புலம்புகிறார்.
