PUBLISHED ON : ஆக 31, 2025 12:00 AM

'இனி, போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது போலிருக்கிறது...' என, பீதியுடன் பேசுகின்றனர், பீஹாரில் உள்ள ஆளும் கட்சியினர்.
இங்கு, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடுத்த சில மாதங்களில் இங்கு சட்ட சபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி, ஒருசில இடங்களில் எதிரொலிக்கத் தான் செய்கிறது.
நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சில வாரங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் ஒன்பது பேர் பலியாகினர். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து துக்கம் விசாரிப்பதற்காக, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷரவண் குமார், அந்த கிராமத்திற்கு சமீபத்தில் சென்றார்.
அப்போது, அமைச்சரை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு, 'சம்பவம் நடந்தவுடன் வராமல், தாமதமாக வந்தது ஏன்? உங்களுக்கு இப்போது தான் நேரம் கிடைத்ததா... தேர்தல் நெருங்குவதால் தான் வந்துள்ளீர்கள்; இல்லையென்றால், இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டீர்கள்...' என,விளாசி தள்ளினர்.
அத்துடன் விடாமல், அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்களை துரத்தி, துரத்தி தாக்கினர். அதிர்ச்சி அடைந்த அமைச்சரும், அவரது சகாக்களும் கார்களில் ஏறி தப்பியோடினர்.
'துக்கம் விசாரிக்க போனதற்கே இந்த கதி என்றால், ஓட்டு கேட்டு போனால் நிலைமை என்னாகுமோ...?' என கலக்கத்தில் உள்ளார், அமைச்சர் ஷரவண் குமார்.