/
தினம் தினம்
/
அக்கம் பக்கம்
/
சோகத்துக்கு முற்றுப்புள்ளி வருமா?
/
சோகத்துக்கு முற்றுப்புள்ளி வருமா?
PUBLISHED ON : ஏப் 22, 2024 12:00 AM

'கடந்த கால வரலாறு எங்களுக்கு பாதகமாக இருந்தாலும், வாரி இறைத்த இலவசங்கள் எங்களை கரை சேர்த்து விடும்...' என, நம்பிக்கையுடன் கூறுகிறார், கர்நாடகா முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா. இரண்டு கட்டங்களாக, வரும் 26 மற்றும் மே 7ல் இங்கு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதில் காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே இங்கு கடும் போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சியாக இருப்பதால், வெற்றி பெறுவது என்பது, காங்கிரசுக்கு கவுரவ பிரச்னையாக உள்ளது.
பொதுவாக லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில், பா.ஜ., தான் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறது. இங்கு மொத்தம், 28 தொகுதிகள் உள்ளன. கடந்த, 2014 தேர்தலில், 17 தொகுதிகளிலும், 2019 தேர்தலில், 25 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றது.
சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு அவ்வப்போது கை கொடுக்கும் கர்நாடகா மக்கள், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கே ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் இந்த முறையும், தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என, பா.ஜ., தலைவர்கள் நம்புகின்றனர்.
ஆனாலும், சித்தராமையா உள்ளிட்ட ஆளும் காங்., மூத்த தலைவர்கள், 'இங்கு நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 33,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இலவச திட்டங்களை மக்களுக்கு அளித்துள்ளோம்.
'வீடுகளுக்கு, 200 யூனிட் இலவச மின்சாரம், ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும், 2,000 ரூபாய், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.
'இந்த திட்டங்களால், தற்போதைய தேர்தலில், கடந்த கால தோல்வி வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்...' என, நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

