
'சிறையில் இருந்து வெளியில் வந்து, கொஞ்ச நாளைக்காவது நிம்மதியாக இருக்க விடுகின்றனரா...' என கோபத்தில் குமுறுகிறார், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
டில்லியில் மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் சிக்கி, இரண்டு மாதங்களாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவால், கடுமையான முயற்சிகளுக்கு பின், சமீபத்தில் ஜாமினில் வெளியில் வந்தார்.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், திரும்பவும் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன், இவருக்கு ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து வந்த கெஜ்ரிவாலை சந்திப்பதற்காக, அவரது வீட்டிற்கு சென்றிருந்தார், ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால். அவரை, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் சிலரும், கெஜ்ரிவாலின் உதவியாளரும் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த ஸ்வாதி மாலிவால் சாதாரணமான பெண் இல்லை. டில்லி பெண்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றியவர். இதனால், இந்த விஷயம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'ஸ்வாதி தாக்கப்பட்டதற்கு கெஜ்ரிவால் என்ன பதில் சொல்லப் போகிறார்...' என, தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகள் வைக்கும் கேள்விக்கு, இதுவரை அவாரல் பதில் சொல்ல முடியவில்லை. தேசிய பெண்கள் ஆணையமும் இது குறித்து விசாரணையை துவக்கியுள்ளது.
இதனால் நொந்து போயுள்ள கெஜ்ரிவால், 'என் நிம்மதியை கெடுப்பதற்கென்றே, இந்த ஜால்ராக்கள் வந்துள்ளனர்...' என புலம்புகிறார்.

