PUBLISHED ON : ஆக 11, 2024 12:00 AM

'இருந்தாலும் இந்த அம்மாவுக்கு இவ்வளவு ஆணவம் கூடாது...' என, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா பற்றி கடுப்புடன் கூறுகின்றனர், டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்கள். கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில்மேற்கு வங்கத்தில் இருந்துவெற்றி பெற்ற மஹுவா மொய்த்ரா, பார்லிமென்டில் சரமாரியாக கேள்விகளை கேட்டு, ஆளுங்கட்சியினரை துளைத்தெடுத்தார்.
தொழில் அதிபர் அதானிக்கும், மத்திய அரசுக்கும் ரகசிய தொடர்புள்ளதாக பார்லிமென்டில் அடிக்கடி குற்றஞ்சாட்டி அதிர வைத்தார். இதுபோன்ற கேள்விகளை கேட்பதற்காக, இவர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய லோக்சபா ஒழுங்குமுறை கமிட்டி, மஹுவா மொய்த்ராவை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.
பா.ஜ., - எம்.பி.,யாக இருந்த வினோத் சோங்கர்தலைமையிலான 15 உறுப்பினர்கள் அடங்கிய ஒழுங்குமுறை குழு தான், இந்த விசாரணையை நடத்தியது.இந்நிலையில், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மீண்டும்சபைக்குள் நுழைந்து விட்டார், மொய்த்ரா. ஆனால், ஒழுங்குமுறை குழுவில் இடம்பெற்றிருந்த வினோத் சோங்கர் உள்ளிட்ட பெரும்பாலானோர் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டனர்.
இதை சுட்டிக்காட்டும் வகையில், 'என்னை தகுதி நீக்கம் செய்தவர்களால் சபைக்குள் நுழையவே முடியவில்லை. ஆனால், நான் வந்து விட்டேன். இது எப்படியிருக்கு...' என, சக பா.ஜ., -எம்.பி.,க்களை பார்த்து கிண்டல் அடிக்கிறார், மஹுவா மொய்த்ரா.

