PUBLISHED ON : ஆக 27, 2024 12:00 AM

'நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்தவர். அதனால், இன்னும் தன்னை பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாக வேண்டும் என விரும்புகிறார்போலிருக்கிறது...' என, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., ரேணுகா சவுத்ரி குறித்து கூறுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
ரேணுகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். குஜ்ரால், மன்மோகன் சிங்ஆகியோர் பிரதமராக இருந்த காலத்தில், மத்தியஅமைச்சராக பதவி வகித்தவர்.
சமீபத்தில், டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்ரேணுகா சவுத்ரி பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்ததும்,உணவு பரிமாறப்பட்டது.அதை சாப்பிட்ட ரேணுகா சவுத்ரி, சமையல் கலைஞரை அழைத்து, வெகுவாக பாராட்டி பேசினார்.
'நான் தீவிரமான சாப்பாட்டு பிரியை. பிரியாணி என்றால் வெளுத்துக் கட்டுவேன். என் வீட்டு சமையல்காரர், ஹைதராபாத் பிரியாணி நன்றாக சமைப்பார். ஒரு நாள், உங்களுக்கும், என் வீட்டு சமையல்காரருக்கும் ஒரு பிரியாணி போட்டி வைக்க முடிவு செய்துள்ளேன்.
'யார் சமைத்த பிரியாணி சுவையாக உள்ளதோ, அவருக்கு கண்டிப்பாக பரிசு அளிப்பேன்...' என்ற ரேணுகா சவுத்ரி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களை பார்த்து, 'இப்போது நான் பேசியது, நாளை பத்திரிகையில் வர வேண்டும்...' என, கிசுகிசுத்தபடியே நடையை கட்டினார்.
பத்திரிகையாளர்களோ, 'உண்மையிலேயே சமையல் கலைஞரை பாராட்டினாரா அல்லது பத்திரிகை செய்திக்காக பாராட்டினாரா எனதெரியவில்லையே...' என, கிண்டலடித்தனர்.

