418
தயாரிப்பு: மைத்ரி மூவீஸ்
இயக்கம்: கீர்த்தன் நடகவுடா
நடிப்பு: சைத்ரா ஆச்சார், சரண், சூர்யா ராஜ், ப்ரித்தி, சஷாங்க், ஸ்ரீவைஷ்ணவ்
ஒளிப்பதிவு: தினேஷ் திவாகர்
இசை: வெங்கி
வெளியான தேதி: அக், 23, 2026
நேரம்: 2 மணி 28 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5
15 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் ஒரு அறைக்குள் யாரும் செல்லக்கூடாது என மருத்துவ கல்லூரி மாணவர்களை எச்சரிக்கிறது நிர்வாகம். ஆனால் அவர்களோ பெட் கட்டி அதற்குள் செல்ல நினைக்கிறார்கள். '418' என்ற அந்த மர்மமான அறைக்கு அருகில் வசிக்கும் மாணவரான சூர்யா ராஜ் சில அமானுஷ்யமான விஷயங்களால் பதறுகிறார். அந்த அறையில் நடந்தது என்ன என மனநல டாக்டர் சுரேஷிடம் கேட்கிறார். அவர் நாட்டுப்புற கலைஞரான சைத்ரா ஆச்சார் கதையை விவரிக்கிறார். குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தீய சக்தி தூண்டுதலால் சில பெண்களை கொன்று தானும் சாகிறார் சைத்ரா.
15 ஆண்டுகளுக்கு பின் அந்த ஆவி மீண்டும் வந்தது எப்படி? தனது குழந்தை ஆசைக்காக இன்னும் சிலரை கொன்றதா? கொரோனா காலத்தில் அந்த மருத்துவக் கல்லூரி பில்டிங்கில் குறிப்பாக 418ம் அறையில் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை கரு.
பேய் கதை என்றாலும் 418 அறையில் நடக்கும் மர்மங்கள், ஒரு நாட்டுப்புற கலைஞரின் குழந்தை பாசம், தீய சக்தியின் ஆட்டம், அதற்கு பலியாகும் அப்பாவி மாணவர்கள் என மாறுபட்ட கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
மாணவர் சூர்யா ராஜ் அந்த கல்லூரியில் சேர்வதில் இருந்து படம் தொடங்குகிறது அவருக்கு சில விஷயங்கள் தெரிய வர சில விஷயங்களால் அவர் பாதிக்கப்பட, படம் சூடு பிடிக்கிறது அந்த அறையில் தங்கி இருந்த சைத்ரா கதையை டாக்டர் சொல்ல இன்னும் சூடு பிடிக்கிறது. மீண்டும் சைத்ரா வர படம் வேகம் எடுத்து ஓடுகிறது.
நாட்டுப்புற கலைஞராக, காதலியாக, குழந்தை இல்லாமல் தவிப்பவராக, தீய சக்தியின் சொல் கேட்டு பெண்களை பலி கொடுப்பவராக ,ஒரு கட்டத்தில் கொலை வெறியுடன் அலைபவராக பல்வேறு கோணங்களில் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார் சைத்ரா. அம்மா பாச சீன்களில் உருக வைக்கிறார். நாட்டுப்புற கலைஞர் சம்பந்தப்பட்ட இடங்களில் கைத்தட்டல் வாங்குகிறார், பேயாக பயப்பட வைக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பேய் படம் என்பதால் அவரை சுற்றி கதை நடக்கிறது.
மருத்துவக் கல்லூரி மாணவராக சூரியராஜ், மிக முக்கியமான கேரக்டரில் அவரின் கிளாஸ்மெட் ஆக ப்ரித்தி அவருடைய நண்பர்கள் என இன்னொரு பார்வையிலும் படம் விரிகிறது. மாணவர்களின் சவால், பயம், சேசிங், நட்பு இதெல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது.
சைத்ரா குடும்பம் கிராமம் சம்பந்தப்பட்ட சீன்களும் இயல்பாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் திவாகர் இசையமைப்பாளர் வெங்கி ஆகியோர் படத்திற்கு பெரிய பிளஸ். அவர்களின் உழைப்பு இன்னும் படத்தை வேகப்படுத்தி பயத்தை அதிகரித்துள்ளது.
ஆனாலும் கன்னட படத்தின் டப்பிங் என்பதால் தமிழ் சாயல் எங்கேயும் இல்லை. மிக முக்கியமான அந்த தாலாட்டு பாடல் கூட தமிழில் இல்லை. சித்ரா தவிர பெரும்பாலான முகங்கள் புது முகங்கள். இந்த கதைக்கும் கொரோனா காலத்துக்கும் ஏன் தொடர்பு ஏற்படுத்தினார்கள் என தெரியவில்லை. அது படத்திற்கு பிளஸ் ஆகவும் அமையவில்லை. தீய சக்தி சம்பந்தப்பட்ட காட்சிகளில் இன்னும் அழுத்தம் பின்புலம் இருந்தால் கதை இன்னும் பேசப்பட்டிருக்கும்.
குழந்தை ஆசையில் ஒரு சாதாரண பெண் என்ன செய்கிறார், என்னவெல்லாம் செய்வார் என்பதை சில இடங்களில் ஏற்க முடியவில்லை. சைத்ரா கேரக்டரிலும் தீய சக்தி கேரக்டரிலும் தெளிவில்லை. குறிப்பாக கிளைமாக்ஸில் டிவிஸ்ட் இருந்தாலும் அடுத்து நடக்கும் விஷயங்கள் டைரக்டர் படத்தை முடித்திருக்கும் விதம் பலருக்கு ஏற்புடையதாக இல்லை.
இரண்டு காலகட்ட கதைகளை கிளைமாக்சில் ஒன்றாக கொண்டு வந்து தீர்வு சொல்ல நினைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த வகை பேய் சீன்கள் பல படங்களில் பார்த்தது; ஆகவே அதில் புதுமை இல்லை.
கதைக்களம், சொல்ல வந்த விஷயம் ஓரளவு புதிது என்றாலும் அதில் அழுத்தம் இல்லை. அதுவே படத்தை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. திரில்லர் பிரியர்களுக்கு மட்டும் ஓரளவு பிடிக்கும்.
418 - தாய் பாசத்தால் பழி வாங்கும் பெண்ணின் கதை