பெத்லகேம் குடும்ப யூனிட் (மலையாளம்)
தயாரிப்பு : பஹத் பாசில், திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன்
இயக்கம் : கிரிஷ் A.D
நடிப்பு : நிவின் பாலி, மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் போர்ட்
இசை : விஷ்ணு விஜய்
ஒளிப்பதிவு : அஜ்மல் சாபு
வெளியீடு : 21 ஆகஸ்ட் 2026,
ரன்னிங் டைம் : 2 மணிநேரம் 37 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
பிரேமலு என்கிற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் கிரிஷ் A.D, அந்த படத்தின் கதாநாயகி மமிதா பைஜூவை வைத்து மீண்டும் இயக்கியுள்ள படம் இது. அதுமட்டுமல்ல மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் வெற்றிக் கூட்டணியான பஹத் பாசில், இயக்குனர் திலீஷ் போத்தன், கதாசிரியர் ஷியாம் புஷ்கரன் மூவரும் தான் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இவ்வளவு எதிர்பார்ப்பை படம் ஈடு செய்கிறதா ? பார்க்கலாம்.
காதலியின் மரணம் காரணமாக திருமணமே செய்து கொள்ளாமல் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார் நிவின்பாலி. அவரது பக்கத்து வீட்டிற்கு கல்லூரி படிப்புக்காக கிராமத்தில் இருந்து குடிவருகிறார் மமிதா பைஜூ. வந்த சில நாட்களிலேயே தன்னைவிட 10 வயதுக்கு மேல் மூத்தவரான நிவின்பாலி மீது காதலில் விழுகிறார் மமிதா. வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி முதலில் நிவின்பாலி தயங்கினாலும், பின்னர் அவரும் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார். கல்லூரி முடித்த கையோடு வெளிநாட்டு வேலைக்கு மகளை அனுப்பலாம் என திட்டமிட்டிருந்த மமிதா பைஜூவின் அம்மாவுக்கும் தாய்மாமனுக்கும் இது அதிர்ச்சி அளிக்கிறது. இதனைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக காதலைப் பிரித்து மமிதாவை வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். வெளிநாடு சென்ற மமிதா மீண்டும் ஊர் திரும்பினாரா ? நிவின்பாலியையே அவர் திருமணம் செய்தாரா ? இல்லை வெளிநாட்டில் வேறு காதலில் விழுந்தாரா ? நிவின்பாலியின் வாழ்க்கை என்ன ஆனது என்கிற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.
திருமணம் செய்து கொள்ளாத முதிர் கண்ணனாக நிவின்பாலி கச்சிதமான நடிப்பு. இளைஞர்களுக்கு மட்டுமல்ல, தன்னைவிடப் பெருசுகளுக்கும் சரிசமமாக கம்பெனி கொடுத்து, அந்த வயதுக்கே உரிய குணாதிசயங்களைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னைவிட பத்து வயது குறைந்த பெண் தன்னைத் காதலிக்கிறாள் என்பதை அறிந்து வெட்கப்படுவதும், அதை ஏற்கலாமா வேண்டாமா என தவிப்பதுமாக கிடைத்த இடங்களிலெல்லாம் அழகாக ஸ்கோர் செய்கிறார். என்ன ஒன்று, மீண்டும் ஸ்லிம் ஆன நிவின்பாலியை எப்போது பார்ப்போம் என்கிற ஏக்கமும் எழுகிறது.
கடந்த வாரம்தான் ஒரு படத்தில் மமிதா பைஜூவின் க்யூட்டான நடிப்பு, எக்ஸ்பிரஷன் எல்லாம் பார்த்து அதிலிருந்து மீள்வதற்குள், இந்த படத்திலும் நம்மை மீளவிடாமல் நடிப்பில் போட்டுத்தாக்குகிறார். ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாக, போகப்போக ஜாலியான பின்பு அட்ராசிட்டியான குணாதிசயங்களை வெளிப்படுத்துவதும், நிவின்பாலியுடனான காதல் கலாட்டாக்களும் என துறுதுறு பெண்ணாக படம் முழுவதும் கவருகிறார் மமிதா.
நிவின்பாலியின் தம்பியாக நடிகர் சங்கீத் பிரதாப் படத்தின் காமெடி பொறுப்பை பெரும்பகுதி ஏற்றுக்கொள்கிறார். இவருக்கும் ஒரு காதல், தம்பியின் காதலுக்காக நிவின்பாலியின் ஆக் ஷன் என ஒரு தனி பிளாக்கும் உண்டு. நிவின்பாலியின் சீனியர் வழிகாட்டியாக சரக்கு பார்ட்டி சுரேஷ் கிருஷ்ணா, மமிதாவை ஒருதலையாகக் காதலித்து ரொமான்ஸ் காமெடி பண்ணும் ரோஷன் ஷாநவாஸ், அக்கா மகளின் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு தன பங்கிற்கு கலாட்டா பண்ணும் வினய் போர்ட், பெண்கள் கேங் அமைத்து கலகலப்பூட்டும் ஷ்ருந்தா ஆசப் மற்றும் படத்தின் பிற கதாபாத்திரங்களும் படத்தின் கலகலப்புக்கு துணை நின்றிருக்கிறார்கள்..
நாயகன் கேட்டரிங் தொழில் செய்பவர் என்பவராலோ என்னவோ, படத்தில் பெரும்பாலான நேரம் ஏதாவது பங்க்ஷன் நடந்து கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவுக்கும், நாம் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறோமா, திருமண விசேஷங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறோமா என்கிற கேள்வி எழுந்திருக்க வாய்ப்புண்டு. அதேபோல விசேஷ கொண்டாட்டங்களுக்கு ஏற்ப களைகட்டும் இசையையும் பாடல்களையும் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய். கல்யாண வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக காட்டுவதாக நினைத்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருந்திருக்கிறார். படத்தொகுப்பாளர் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ். அங்கு கொஞ்சம் கத்திரியைப் பயன்படுத்தியிருக்கலாம்.
முந்தைய படத்தில் இளம் பிராயத்தினருக்கு இடையே ஏற்படும் காதல், அது குறித்த தடுமாற்றம் ஆகியவற்றை வைத்து ஜாலியாக கதை சொன்ன இயக்குனர் கிரிஷ் A.D, இந்தப் படத்தில் கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கு, தன்னைவிட வயது கூடிய ஒருவருடன் காதல் வருவதை தி கலகலப்பான பாணியில் நியாயப்படுத்த முயற்சித்திருக்கிறார். அதேசமயம் காட்சிகளில் வித்தியாசம் காட்டியிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த பல படங்களின் டெம்ப்ளேட்டுகள் போலவே இருப்பது ஆர்வத்தைக் குறைக்கிறது.
கிளைமாக்ஸில் ஏதாவது புது திருப்பத்தை ஏற்படுத்தி நம்மை நிமிர்ந்து உட்கார வைப்பார் என எதிர்பார்த்தால், சாதாரணமாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் நம்மை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் இயக்குனர் கிரிஷ் A.D. ஆனால் இளசுகளைக் கவரும் விதமான அம்சங்கள் நிறைய இருப்பதால், இந்தப் படத்திற்கு இளைஞர்கள் கூட்டத்தின் ஆதரவு மட்டுமல்ல, படம் முழுவதும் குடும்ப நிகழ்வுகளைச் சுற்றி நடப்பதால் குடும்ப ரசிகர்களின் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும்.
பெத்லகேம் குடும்ப யூனிட் - கல்யாண கலாட்டா