பிளாஷ்பேக்: சமணத்துறவியாக நடிக்க மறுத்த கே.பி.சுந்தராம்பாள்
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் 'பூம்புகார்' என்ற பெயரில் சினிமா ஆனது. இதில் கண்ணகியாக விஜயகுமாரி, கோவலனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ, நடித்தனர். ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்துக்கு ஆர். சுதர்சனம் இசை அமைத்தார். வசனங்களை கருணாநிதி எழுதினார்.
இந்த படத்தில் சமணத்துறவியான கவுந்தி அடிகள் கேரக்டரில் கே.பி.சுந்தராம்பாள்தான் நடிக்க வேண்டும் என்று கருணாநிதி பிடிவாதமாக இருந்தார். கே.பி.சுந்தராம்பாள் எப்போதும் நெற்றி நிறைய திருநீரோடு இருக்கிறவர் அதனால் திருநீரு அணியாத இன்னொரு மதத்தின் துறவியாக நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.
ஹிந்தி எதிர்ப்புக்காகக் கைது செய்யப்பட்ட கருணாநிதியை, மதுரை சிறையில் இருந்து திருச்சி சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில் சுந்தராம்பாளை சந்தித்த கருணாநிதி, அவரைச் சமாதானப்படுத்தி, நெற்றியில் ஒரு கோடாக நாமத்தைப் போட்டு இதில் நடிக்கச் சம்மதிக்க வைத்தாராம்.
படத்தில் இடம்பெற்ற 'அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது. நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது' என்ற பாடல் வரியைப் பாட மறுத்துவிட்டார் சுந்தராம்பாள். இறைவனைக் கேலி செய்வதாக அந்த வரிகள் வருகிறது எனக் கூறிவிட்டார். பிறகு, அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது, நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது” என்று மாயவநாதன் எழுதிய வரியைக் கருணாநிதியே மாற்றினாராம். பிறகுதான் அவர் பாடினார்.