உங்கள் பார்வையில் ராமாயணத்தை படமாக எடுங்கள் : வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் அட்வைஸ்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது 'ராமாயணா' படம். இதில், ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசை அமைத்துள்ள இப்படம் வெளியான 20 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1,750 கோடி வரை வசூலித்து இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் இந்திய இதிகாசமான ராமாயணம் திரித்து கூறப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணைகளுக்கு பிறகு படம் பற்றி கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி “படம் ஏற்கெனவே வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படத்தை பார்க்க விரும்பியவர்கள் எல்லாம் ஏற்கெனவே பார்த்துவிட்டனர். 'அவர்களுக்கு புரிந்தபடி அவர்கள் ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். நீங்கள் விரும்பிய படி நீங்கள் ஒரு படத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள். அந்த இதிகாசத்தின் மீது உங்களுக்கு மாற்றுப் பார்வை இருந்தால், அதன் அடிப்படையில் நீங்கள் ஒரு படம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆகவே இந்த மனுவை அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை” என்றார்.