அஜித், நயன்தாரா குறித்து கடுமையாக விமர்சித்த திருப்பூர் சுப்பிரமணியம்
தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் திருப்பூர், கோயம்பத்தூர், ஈரோடு, தாராவுரம், கோபி ஆகிய ஊர்களில் தியேட்டர்களை நடத்தி வருகிறார்.
அவரது தியேட்டர் யூ டியூப் சேனலில் நேற்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன்களுக்கு வராமல் இருக்கும் அஜித், நயன்தாரா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
“உலகப் புகழ் பெற்ற நடிகர்கள் கூட அவர்களது பட புரமோஷன்களுக்கு வருகிறார்கள். அஜித், நயன்தாரா அவர்களுக்குள் பெரிய கிரீடம் இருப்பதாகவும், அப்படி போகாமல் இருப்பது ஒரு 'கெத்து' என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அது மார்க்கெட்டை கீழே கொண்டு போய் விடும். அப்படி வராமல் இருந்தால் காணாமல் போய்விடுவார்கள்.
ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவரைப் பற்றி நிறைய விமர்சனங்கள் சொல்லி இருக்கிறேன். 100 கோடி, 150 கோடி சம்பளம் வாங்க மட்டும் தெரிகிறது. ஆனால், புரமோஷனுக்கு வந்து அவர்களது தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்து கொடுக்க வேண்டும் என்று தெரியல்லை.
அவர்களது சொந்தப் படம் எடுக்கும் போது மட்டும் நயன்தாரா புரமோஷனுக்குச் சென்று நின்றார். அஜித் அவரது 'டேர் டெவில்' படத்தின் பூஜைக்கு வரவில்லை. ஆனால், புரமோஷனுக்கு வருவார் பாருங்கள்.
விளம்பரங்களில் நடிக்க மட்டும் செல்கிறார். இப்போது அவரை வைத்து படமெடுக்க யார் முன் வந்தது, யாரும் வரவில்லையே. சொந்தப் படம் தானே எடுக்க முடிகிறது. நயன்தாராவும் இப்படியே சென்றால் சொந்தப் படம் மட்டும்தான் எடுக்க முடியும்,” என்று பேசியுள்ளார்.