நவம்பர் 27 வெளியீடுகள் : அறிவிக்கப்பட்டவை 13, வெளியாவது 9
2026ம் ஆண்டின் 11வது மாதமான நவம்பர் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று நவம்பர் 27ம் தேதி 13 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
“606, சிட்டுக்குறிஞ்சி, டெலிவரி பாய், கோ 2 கோ, ஜெடூசி, மதுர மோசடி, மின்னும் ஓர் இரவு, மௌன மொழிகள், நெல்லை பாய்ஸ், பேய் பிடிச்சிருக்கு, நிறம், சிக்னல் அட் 11:30, வட மஞ்சுவிரட்டு” ஆகிய 13 படங்கள் வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தன.
அவற்றில், “சிட்டுக்குறிஞ்சி, டெலிவரி பாய், ஜெடூசி, மின்னும் ஓர் இரவு, மௌன மொழிகள், நெல்லை பாய்ஸ், பேய் பிடிச்சிருக்கு, நிறம், சிக்னல் அட் 11:30,” ஆகிய படங்கள் மட்டுமே இன்று வெளியாகின்றன.
தமிழக அரசு கடந்த மாதம் காலை 6 மணிக்கு சிறப்புக் காட்சிகளை ஒரு வாரத்திற்கு நடத்திக் கொள்ள அனுமதி அளித்திருந்தது. மேலே குறிப்பிட்டுள்ள படங்கள் எதற்கும் இன்று காலை 6 மணி காட்சி நடைபெறவில்லை. அனைத்துமே சிறிய படங்கள் என்பதால் அவற்றிற்கான முன்பதிவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
இன்று வெளியாகும் 9 படங்களுடன் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்துள்ளது.