'அரிகொம்பன்' படத்திற்காக உருவான செயற்கை காடு, குளம், கிராமம்
மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரித்துள்ள படம் 'அரிகொம்பன்'. மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதை நாயகனாக நடித்துள்ளார். தேவகி கிருஷ்ணன் என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். அப்புகுட்டி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாகிஷ்ணா சேவியர் இசை அமைத்துள்ளார். டிசம்பர் 11-ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் இயக்குநர் மிதுன் மாதேஸ்வரன் பேசியதாவது: இப்படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது, இயக்குநராகப் பணியாற்றிய முன் அனுபவம் எதுவும் எனக்குக் கிடையாது. இதுவரை எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. நான் நடித்த திரைப்படங்களின் அனுபவங்களையே அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கினேன்.
நான் பணியாற்றிய அனைத்து திரைப்படங்களின் இயக்குநர்களையும் எனது குருவாகவே கருதுகிறேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட அனுபவங்களே இப்படத்தை உருவாக்குவதற்குப் பெரிதும் உதவின.
'அரிகொம்பன்' திரைப்படம் 1980ம் ஆண்டின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தை உருவாக்குவதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளோம். குறிப்பாக, படத்தில் இடம் பெறும் காட்டுப் பகுதி முழுவதும் அரங்குகளாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இரண்டு கிராமங்கள், குளம் உள்ளிட்ட படத்தில் இடம்பெறும் அனைத்து இடங்களையும் கலை இயக்குநர் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
இதற்காகச் சுமார் ஆறு மாதங்கள் உழைத்த அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யானை தொடர்பான காட்சிகளையும் அவரே உருவாக்கியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் எங்களைவிட அதிக நேரம் செலவிட்டு உழைத்தவர் அவர்தான். அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. என்றார்.