பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த படம்
பொதுவாக அந்தக் காலத்தில் நடிப்பிற்கு சிவாஜியையும், ஆக்ஷனுக்கு எம்ஜிஆரையும் சொல்வார்கள். சிவாஜி படத்தில் ஆக்ஷன் குறைவாக இருக்கும், எம்ஜிஆர் படத்தில் அவர் உருகி நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். தான் அழுவதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் அழுகிற காட்சிகள் வந்தால் முகத்தை திருப்பிக் கொண்டு அழுவதை வழக்கமாக வைத்திருந்தார் எம்ஜிஆர்.
ஆக்ஷன் ஹீரோவான எம்ஜிஆர் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் பல படங்களில் நடித்துள்ளார். என்றாலும் இன்று வரைக்கும் அவர் தனது உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்திய படம் 'பணக்கார குடும்பம்'. பாசம், பெரிய இடத்து பெண் என்ற இரண்டு கமர்ஷியல் படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு டி.ஆர்.ராமண்ணா இயக்கிய படம் 'பணக்கார குடும்பம்'. முந்தைய இரண்டு படங்களோடு ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
சக்தி டி.கே. கிருஷ்ணசாமி எழுதியுள்ள இப்படத்தின் கதை, முத்தையா என்ற செல்வந்தரைச் சுற்றி நகர்கிறது. தனது கடந்த கால அவப்பெயரால், அவர் மிகுந்த மன அழுத்தத்துடனும் மகிழ்ச்சியற்ற நிலையிலும் வாழ்கிறார். அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மூலம் பிறந்த தனது மகளை, அவர் ஒரு தனி வீட்டில் தங்க வைக்கிறார். தனது இரண்டாவது மனைவி மற்றும் அவளது ரௌடித்தனம் கொண்ட சகோதரன் ஆகியோருக்கு, தனது கடந்த காலம் தெரிந்திருப்பதாலும், அவர்கள் தனது மகளைப் பற்றி அறிந்து கொள்வதை விரும்பாததாலும், அவர் இத்தகைய ஏற்பாட்டைச் செய்கிறார்.
அந்த மகள், தனது தந்தையின் அலுவலகத்தில் செயலாளராகப் பணிபுரிகிறாள். அங்கு அவள் ஒரு நேர்மையான இளைஞனைக் காதலிக்கத் தொடங்குகிறாள்; அந்த இளைஞனுக்கும் அதே அலுவலகத்தில் அவள் வேலை பெற்றுத் தருகிறாள். இவர்களின் காதல், முத்தையாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமைகிறது. எனவே, முத்தையா அந்த இளைஞனிடம் கெஞ்சிக் கேட்டு, தனது மகளுடனான காதலைக் கைவிடுமாறும், தான் அமைதியாகவும் கண்ணியமாகவும் வாழ உதவுமாறும் வேண்டுகிறார்.
அந்த இளைஞன் தனது காதலையும் மகிழ்ச்சியையும் தியாகம் செய்கிறான். இருப்பினும், இறுதியில் காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள், தீயவர்கள் தகுந்த தண்டனையைப் பெறுகிறார்கள். இதுதான் படத்தின் கதை.
இந்த படத்தின் ஹைலைட்டே எம்ஜிஆர் - சரோஜாதேவியின் காதல்தான். இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்திருந்தாலும் இந்த படம் அளவிற்கான அற்புதமான காதல் காட்சிகள் வேறு படத்தில் இடம்பெறவில்லை. உதாரணமாக காதலி சரோஜாதேவிக்கு இன்னொருவருடன் திருமணமாக இருக்கும். அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு எம்ஜிஆர் செல்வார். அவர் சரோஜாதேவிக்கு ஒரு வெள்ளி குத்துவிளக்கு, ஒரு மெழுகுவர்த்தி, ஒரு தீப்பெட்டியை பரிசளிப்பார். அந்த பரிசுக்குரிய விளக்கத்தை எம்ஜிஆர் சொல்வார். அப்படியான ஒரு காதல் காட்சியில் பிறகு எம்ஜிஆரே நடிக்கவில்லை.
இன்னொருவரின் நலனுக்காக தன் காதலை தியாகம் செய்யும் அற்புதமான கேரக்டர் எம்ஜிஆருக்கு. சரோஜாதேவியின் அழகும், நடிப்பும் அற்புதமாக இருக்கும். இந்த படத்திற்கு பிறகே எம்ஜிஆர் - சரோஜாதேவி 'மேட் பார் ஈச் அதர்' ஜோடியாக வலம் வந்தார்கள்.
நகைச்சுவை கலந்த, அதே சமயம் மிகுந்த சவால்கள் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் நாகேஷ் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது மறக்க முடியாத, தனித்துவமான நடிப்பாகும். ஒரு காட்சியில், அவர் நான்கு வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த தாத்தா, தந்தை, மகன் மற்றும் கைக்குழந்தை என நான்கு கதாபாத்திரங்களில் தோன்றி, ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார்.
இப்போதும் யு டியூப்பில் இந்த படத்தை கண்டு களிக்கலாம்.