உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ்நாட்டில் வெளியாகும் மலேசிய தமிழ் படம்

தமிழ்நாட்டில் வெளியாகும் மலேசிய தமிழ் படம்

தமிழ்நாட்டில் திரைப்படங்கள் தயாரிப்பது போன்று மலேசியாவில் உள்ள தமிழ் கலைஞர்கள் அங்கு சிறிய அளவிலான படங்களை தயாரிக்கிறார்கள். இந்த படங்கள் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து என கிழக்காசிய நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் திரையிடப்படும். அப்படி சமீபத்தில் வெளியாகி அங்கு பரவலாக பேசப்பட்ட படம் 'இரும்புத் தோட்டம்'. இந்த படம் தமிழ்நாட்டில் வெளியாகிறது.

ஏ.வி.எல்.டி புரொடக்ஷன் சார்பில், ஜெகன் ஜான் பீட்டர் இந்த படத்தை தயாரித்துள்ளார். புலனாய்வு கிரைம் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' மற்றும் 'கோட்' திரைப்படங்களின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்ற இர்பான் ஜைனி இதில் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும் லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷினி மேத்யூஸ், மோகன ராஜ், துர்காஷினி எஸ்.வினோஷன், பாலன் காஷ், டத்தோ கீதாஞ்சலி, கலைமாமணி கே.எஸ்.மணியம், நிஷா மற்றும் விஜய் நாயுடு உள்ளிட்ட மலேசியாவைச் சேர்ந்த நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஷமேஷன் மணிமாறன் இசையமைத்திருக்கிறார்.

படம் குறித்து இயகக்குநர் கூறும்போது “ஒரு மாணவியின் மர்மமான கொலை, அதைச் சுற்றி ஒரு ஆசிரியர் மேல் எழும் சந்தேகம். தடயவியல் டிடெக்டிவ் அதிகாரி ஒருவர் உள்ளூர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கிறார். விசாரணையின் போக்கில் பல ரகசியங்கள் முடிச்சு முடிச்சாக அவிழ்கின்றன. உண்மையான கொலையாளி யார் எனக் கண்டுபிடிப்பதுடன் சமூகத்தின் மேலோட்டமான பிம்பத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் கசப்பான உண்மைகளைத் தேடும் நீதிக்கான பயணமே இந்த படம்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !