பிளாஷ்பேக் : 'அண்ணாமலை'யை இயக்கிய 3வது இயக்குநர்
ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'அண்ணாமலை'. பால் வியாபாரம் செய்யும் ஒரு வெகுளியான மனிதன், நண்பனின் துரோகத்திற்கு பழிவாங்க பணக்காரன் ஆகிறான் என்பது தான் அண்ணாமலை திரைப்படத்தின் ஒருவரிக் கதை. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, சரத்பாபு, ராதாரவி, மனோரமா, ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. கே.பாலச்சந்தர் தனது சிஷ்யர் வசந்த்தை வைத்து இந்த படத்தை இயக்குவதாக பத்திரிகைகளில் முழு பக்கம் விளம்பரம் கொடுத்தார். ஆனால் கதை மாற்றம், சில காட்சிகள் மாற்றம் போன்றவற்றால் வசந்த் விலகிக் கொண்டார். விலகலுக்கான காரணத்தை வசந்த் இதுவரை தெரிவிக்கவில்லை.
வசந்த் விலகியதால் படத்தை பி.வாசு இயக்கட்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டார். அவரை அணுகியபோது அப்போது அவர் கே.பாக்யராஜ் தயாரித்து, நடிக்கும் 'அம்மா வந்தாச்சு' என்ற படத்தை இயக்குவதில் பிசியாக இருந்தார். அந்த படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னதை கே.பாலச்சந்தர் ஏற்கவில்லை. தானே இயக்கி விடலாமா என்று யோசித்தார். ஆனால் அந்த கதை தனக்கு ஏற்புடையதல்லாத கமர்ஷியல் கதை என்பதால் தயங்கினார். இறுதியாக சுரேஷ் கிருஷ்ணா இயக்குவதாக முடிவானது. படம் பெரிய வெற்றி பெற்றது. இதற்கிடையே இயக்குனரும், நடிகருமான விசுவிடமும் பேசியதாகவும் ஒரு தகவல் உள்ளது.