ஆஸ்கர் விருதுக்கு செல்லும் இளையராஜா படம் : தமிழில் இன்று வெளியாகிறது
சந்தோஷ் தாவாகர் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த மராத்திய படம் கோந்தல். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படம் ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் நாளை (நவம்பர் 13) தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தியாவின் 99 ஆவது ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரைப் படமான சந்தோஷ் தாவகார் இயக்கிய 'கோந்தல்' திரைப்படத்தின் சர்வதேச டிரைலரும் இப்போது வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் கலாச்சாரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், புதுமணத் தம்பதிகளான சுமன் மற்றும் ஆனந்த்ராவை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஆசை, கடமை, பக்தி ஆகியவை ஒன்றோடொன்று மோதும்போது அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களே கதையின் மையம்.
மணமகளின் ஏக்கம், கணவனின் கடமைகள் மற்றும் அடுத்தடுத்து நிகழும் மர்மமான சம்பவங்கள் என இருவரும் புரியாத புதிர்கள் நிறைந்த சுழலுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். வெளிப்படையாகத் தெரிவது உண்மையாக இருக்குமா என்ற கேள்வியையும், உண்மையின் மற்றொரு முகத்தையும் படம் ஆராய்கிறது. பதற்றமான காட்சிகள், மர்மம் நிறைந்த பின்னணி மற்றும் தனிப்பட்ட ஆசைகளுக்கும் சமூகக் கடமைகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் உறவு என கதை நகர்கிறது.
படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் தாவகார் கூறுகையில், “இந்தியத் திரைப்படங்கள் குறித்த உலகளாவிய பார்வை பெரும்பாலும் வறுமை மற்றும் சாதிய மோதல்கள் சார்ந்த கதைகளால் உருவாக்கப்படுகிறது. அவைதான் கள யதார்த்தம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவை மட்டுமே இந்தியாவின் முழுமையான அடையாளம் அல்ல.
'கோந்தல்' வெறும் திரைப்படம் மட்டுமல்ல. தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமம். இந்தப் பாரம்பரியத்தை உலகம் அறிந்துகொள்ளச் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆஸ்கர் விருதுகள் போன்ற சர்வதேசத் திரைப்பட விழாக்கள், நமது கலாச்சாரத்தை இந்தியாவைத் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லத் திரைப்பட இயக்குநர்களுக்கு உதவுகின்றன என்றார்.
இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹானி மற்றும் நிஷாத் போயர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அமலேந்து சவுத்ரி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே 25 நிமிடங்கள் இடைவெளியின்றி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட காட்சி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.