பாஜக தலைவரின் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய மம்முட்டி
நடிகர் மம்முட்டியைப் பொறுத்தவரை அரசியலில் எந்தப் பக்கமும் சார்புடையவராக இல்லை என்றாலும் கூட, அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவானவர் என்பது போலத்தான் ஒரு சித்தரிப்பு எப்போதுமே இருந்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் பி. கோபால கிருஷ்ணன் மகள் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்கு மம்முட்டியும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்த முடியாத குறையைப் போக்க, நேரடியாக பி. கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் மம்முட்டி.
இதனைத் தொடர்ந்து மம்முட்டிக்கு எதிராக சிலர் சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை எழுப்பினார்கள். அதேசமயம் இன்னொரு பக்கம், சம்பந்தப்பட்ட பாஜக தலைவர் பி. கோபாலகிருஷ்ணன் கடந்த வருடம் அதாவது கடந்த வருட அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட போது அதில் மம்முட்டிக்கு விருது கிடைத்ததைக் குறித்து விமர்சிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது மம்முட்டி தனது வீட்டுத் திருமணத்திற்கு நேரிலேயே வந்து வாழ்த்து தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்தப் பதிவை தனது சோசியல் மீடியா பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். மேலும் மம்முட்டிக்கு எதிரான சைபர் தாக்குதல்களைக் கண்டித்துள்ள கோபாலகிருஷ்ணன், தனக்கும் மம்முட்டிக்கும் இடையே நல்ல தனிப்பட்ட உறவு இருப்பதாகவும், அப்படிப்பட்ட நல்லுறவுகளுக்கு எல்லைகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.