பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் 'என் கடமை' தோல்விக்கான காரணம்
எம்ஜிஆர் நடித்த படங்களில் சில தோல்வி படங்களும் உண்டு. அதில் முக்கியமானது 'என் கடமை'. இதில் எம்ஜிஆர் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்திருந்தார். எம்.நடேசன் என்பவர் இயக்கி இருந்தார். விஜயலட்சுமி, கே.பாலாஜி, நம்பியார் மனோரமா, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஸ்வநாதன் அண்ட் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர்.
பணக்காரரான தர்மலிங்கத்துக்கு இரு மகன்கள். மூத்தவன் ஏழை கமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவர்களை தர்மலிங்கம் ஏற்றுக் கொள்ள மாட்டார். மூத்த மகன் இறந்து கமலாவும், அவர்களின் ஒரே குழந்தையும் அனாதையான நிலையில், இன்ஸ்பெக்டர் நாதன் (எம்ஜிஆர்) கமலாவுக்கும், அவளது குழந்தைக்கும் அடைக்கலம் தருவார். நியாயப்படி கமலாவுக்கு சேர வேண்டிய சொத்துக்காக அவள் போராட வேண்டும் என்று நினைப்பார் இன்ஸ்பெக்டர் நாதன். ஆனால், அவள் கோர்ட்டுக்கு செல்லும் வழியில் கொல்லப்படுவாள்.
கமலாவை கொன்றது யார் என்பதை இன்ஸ்பெக்டர் நாதன் கண்டுபிடிப்பதுதான் கதை. குடும்ப பாங்கான துப்பறியும் கதை என்று இதனை வகைப்படுத்தலாம். எம்ஜிஆர் ரசிகர்களுக்கான சண்டை, காதல், சரசம், பாடல்கள் என அனைத்தும் என் கடமையில் இடம்பெற்றிருந்தது. எனினும் படம் வெற்றிபெறவில்லை.
திமுக தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எம்ஜிஆர் சட்டசபையில் இருந்து விலகிய நிலையில் திமுகவினர் எம்ஜிஆருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால் படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. எம்ஜிஆரே வெளியிட்டார். திமுகவினர் படத்தை புறக்கணித்தாலும் மக்களை தியேட்டருக்கு செல்ல விடாமல் தடுத்ததாலும் படம் தோல்வி அடைந்ததாக கூறுவார்கள்.
ஆனால் இதனை எம்ஜிஆர் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னாளில் 'என் கடமை' தோல்வி குறித்து எம்ஜிஆரிடம் கேட்டபோது 'என் ரசிகர்களை திருப்திப்படுத்த நான் கூடுதலாக உழைத்திருக்க வேண்டும்'. என்று குறிப்பிட்டார்.