உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞர் சதானந்தம் காலமானார்

இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞர் சதானந்தம் காலமானார்

பழம்பெரும் இசையமைப்பாளர் ஆர் சுதர்சனமின் மகனும், இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞருமான சதா என்கிற சதானந்தம் (79) சென்னையில் காலமானார். வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தவருக்கு இன்று(அக்., 29) காலை ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக அவரது உயிர் பிரிந்தது.

ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஆர் சுதர்சனமும் ஒருவர். அன்றைய காலக்கட்டத்தில் பல படங்களுக்கு இசையமைத்தார். இவரது மகன் தான் சதானந்தம். கடந்த 1947 செப்டம்பர் 30ம் தேதி பிறந்த அவர் சிறுவயதில் இருந்தே அப்பா வழியில் இசையில் ஆர்வம் கொண்டார். குறிப்பாக கிதார் இசையில் கைதேர்ந்தவர். இசையமைப்பாளர் இளையராஜாவின் உற்ற நண்பராக திகழ்ந்தவர். இளையராஜா தனியாக இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பே, அவருடன் இணைந்து, ஒன்றாக இசை பயின்று, வேறு இசையமைப்பாளர்களுக்கு இசைக்கலைஞர்களாக பணியாற்றி உள்ளனர். ஒரே ஆண்டில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இருவரும் ஒன்றாக இசைக் கலைஞர்களாய் பணிபுரிந்த அனுபவத்தை பல மேடைகளில் இளையராஜா பகிர்ந்துள்ளார். அப்போதெல்லாம் அவரது வீட்டில் அவரது அன்னையின் உபசரிப்பில் சாப்பிட்ட அனுபவங்களையும் ராஜா பகிர்ந்துள்ளார்.

இளையராஜா இசைக்குழுவில் 40 ஆண்டுகளுக்கு மேல் முதன்மை கிதார் கலைஞராக பணியாற்றிய அவர், இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமான 'அன்னக்கிளி' என்ற படத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு கிதார் வாசித்துள்ளார்.

நைலான் கிதார், ஸ்டீல் கிதார், எலக்ட்ரிக் கிதார் உள்பட அனைத்து வகையான கிதார்களிலும் திறமையை நிரூபித்த அவர் கீபோர்டு, வைப்ராபோன் போன்ற கருவிகளை வாசிப்பதிலும், புரோகிராமிங் செய்வதிலும் வல்லவராக திகழ்ந்தார். தனியாக சில பக்தி இசை ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் எல்லா மேடை இசை நிகழ்ச்சிகளிலும் இவர் தொடந்து இசைத்து வந்தார். இவரை சதா என்று அன்போடு ராஜா அழைப்பார். ரமணமாலை இசைத்தொகுப்பில் வரும் சதா சதா என்ற பாடலை சதாவை மனதில் வைத்து தான் எழுதியதாக இளையராஜா முன்பு ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

சதானந்தமின் உடல் அஞ்சலிக்காக சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு கல்பனா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு மைலாப்பூரில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !