பிரேசில் நாட்டில் 'வாரணாசி' அப்டேட் தந்த ராஜமவுலி
'பாகுபலி' படங்கள் மூலம் இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை உலகிற்குக் காட்டியவர் தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி. அடுத்து அவர் இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் அப்படத்திற்கான சிறந்த ஒரிஜனல் பாடலுக்கு ஆஸ்கர் விருதையும் வாங்கித் தர காரணமாக இருந்தார்.
தற்போது, மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கும் 'வாரணாசி' படத்தை இயக்கி வருகிறார். பிரேசில் நாட்டில் சா பாலோ திரைப்பட விழாவில் லியோன் கக்காப் விருது பெறுவதற்காக அங்கு சென்றிருந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் 'வாரணாசி' படம் குறித்த அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.
“அப்பா மகன் இடையிலான பாசம், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு ஆகியவை 'வாரணாசி' படத்தின் முக்கியமான எமோஷனலாக இருக்கும். இப்படம் மிகவும் லட்சியமான, பிரம்மாண்டமான ஒரு திட்டம். இதன் ஒவ்வொரு பகுதியும் ஒரு முழு நீளத் திரைப்படத்திற்கு இணையானது. சொல்லப்போனால், ஆறு அல்லது ஏழு திரைப்படங்களை ஒன்றாக இணைத்தது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை உருவாக்குவதற்கு மிகுந்த உழைப்பும், அளப்பரிய முயற்சியும் தேவைப்பட்டன.
படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன, அதன்பிறகு படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும். இறுதியாக, படப்பிடிப்பின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகள் மிகுந்த சோர்வையும் சவால்களையும் நிறைந்தவையாக இருந்தன. இப்போது, நாங்கள் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு செல்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.