மலேசியாவில் கவுதம் மேனன் வெள்ளி விழா
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, அதற்கான விழா, இசை விழாவாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வருகிற அக்டோபர் 10ம் தேதி நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு 'ஒன்றா ரெண்டா' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
கவுதம் வாசுதேவ் மேனனின் திரையுலகப் பயணத்துடன் இணைந்த மறக்க முடியாத இசை, கதைகள் மற்றும் இனிய நினைவுகளை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான கார்த்திக், ஸ்ருதி ஹாசன், கிரிஷ், சைந்தவி, பால் டப்பா, சத்ய பிரகாஷ் மற்றும் ஹரிப்ரியா ஆகியோர் பங்கேற்று, கவுதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியை மை ஈவன்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ராதிகாவின் ராடான் நிறுவனம் நடத்துகிறது. இதேபோன்ற நிகழ்ச்சி இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.