பிளாஷ்பேக் : சினிமாவை நம்பி நாடகத்தை இழந்த டி.கே.எஸ்.சந்திரன்
சினிமா வந்த பிறகும் பலர் நாடகத்தில் பெரிய நட்சத்திரங்களாக இருந்தார்கள். அவர்கள் சினிமா நடிகர்களுக்கு இணையாகவும் மதிக்கப்பட்டார்கள். அப்படிபட்டவர்களில் முக்கியமானவர் டி.கே.எஸ்.சந்திரன். பின்னணி பாடகர் திருச்சி லோநாதனின் சகோதரி மகன்.
இவரது பால்ய வயதில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியின் நாடகக் குழுவில் அண்ணாதுரையின் 'சந்திரோதயம்' நாடகத்தில் நடித்தார். மல்லியம் ராஜகோபால், டணால் கே.ஏ.தங்கவேலுவின் நாடகங்களிலும் நடித்துள்ளார்.
நாடகத்தில் பெரிய ஆர்வம் கொண்ட சந்திரன் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனாலும் “ஆயிரங்காலத்துப் பயிர் என்ற படத்தில் இவர்தான் கதாநாயகன். இப்படத்தில்தான் டி.எஸ்.துரைராஜால் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படத்தில் நாயகனாக அறிமுகமானவருக்கு அடுத்து அப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நாடக காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்த ஏவிஎம் ராஜன், அசோகன், கமல்ஹாசன், ஜெய்சங்கர் ஆகியோரின் சிபாரிசின் பேரில் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். கணவன், சங்கே முழங்கு, தூண்டில் மீன், பவானி, ஆலயம், பயணங்கள் முடிவதில்லை, பொய் சாட்சி, கோபுரங்கள் சாய்வதில்லை, நாலு பேருக்கு நன்றி, பொய் சாட்சி, சட்டத்தைத் திருத்துங்கள், கடவுளின் தீர்ப்பு, ஸ்ரீ கிருஷ்ணலீலா போன்றவை சந்திரன் நடித்த சில முக்கியமான படங்கள்.
'நாடகத்திலேயே நான் கடைசி வரை இருந்திருக்க வேண்டும், சினிமாவிற்கு வந்ததுதான் நான் செய்த பெரிய தவறு' என்று பிற்காலத்தில் பல இடங்களில் தனது வேதனையை பதிவு செய்திருக்கிறார் டி.கே.எஸ்.சந்திரன்.