உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கலையுலகம் கவனிக்கத் தவறிய காமெடி நடிகர்

பிளாஷ்பேக்: கலையுலகம் கவனிக்கத் தவறிய காமெடி நடிகர்


1980களின் பிற்பகுதியில் வெளிவந்து, தமிழ் திரையுலகில் ஒரு சாதனை வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம்தான் “கரகாட்டக்காரன்”. இந்தத் திரைப்படத்தின் பெயரைச் சொன்னவுடனே நம் அனைவரது நினைவிற்கும் வருவது, கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டணியில் அமைந்த அந்த 'வாழைப்பழ' காமெடி. இந்த நகைச்சுவைக் காட்சியை எழுதிய பேனாவிற்குச் சொந்தக்காரர்தான் நாம் இங்கு காண இருக்கும் அந்தக் காமெடி நடிகர். நாகேஷ், வி கே ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு என தமிழ் திரையுலகில் தனிப்பெரும் ஆளுமைகளாக கோலோச்சியிருந்த நகைச்சுவை நடிகர்கள் பலரில் நாம் பெரிதாக கவனிக்கத் தவறிய ஒரு காமெடி நடிகராக பார்க்கப்படுபவர்தான் நகைச்சுவை நடிகர் ஏ வீரப்பன்.

அபார திறமையும், ஆகச்சிறந்த கற்பனை வளமும் கொண்ட நகைச்சுவை நடிகரான இவர், நாடகத் துறையிலிருந்து சினிமாத் துறைக்கு வந்தவர். இவர் நடித்த முதல் திரைப்படம் 1956ம் ஆண்டு வெளிவந்த “தெனாலிராமன்”. தொடர்ந்து “பணத்தோட்டம்”, “படகோட்டி”, “கலங்கரை விளக்கம்”, “பஞ்சவர்ணக்கிளி”, “யார் நீ?”, “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி”, “சோப்பு சீப்பு கண்ணாடி”, “பொண்ணு மாப்பிள்ளை”, என 1960களில் ஒரு நகைச்சுவை நடிகராகவும், வசனகர்த்தாவாகவும் பயணப்பட்டுக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் ஏ வீரப்பனின் கலையுலக வாழ்வில் 1980களின் காலகட்டம் அவருடைய வேறொரு பரிமாணத்தைப் பிரதிபலிக்கச் செய்த ஒரு காலகட்டமாகவே அமைந்திருந்தது எனலாம்.

இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனின் அறிமுகத் திரைப்படமான “பயணங்கள் முடிவதில்லை” திரைப்படத்தின் தயாரிப்பாளரான “மதர்லேண்ட் பிக்சர்ஸ்” அதிபர் கோவைத் தம்பியின் அறிமுகம் இவருக்குக் கிடைக்க, அதன் மூலம் அத்திரைப்படத்தின் நகைச்சுவைப் பகுதிகளை எழுதும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றார் ஏ வீரப்பன். இந்தப் படத்திலிருந்துதான் ஏ வீரப்பனுக்கும், கவுண்டமணிக்குமான நட்பும் ஆரம்பமானது.

அடுத்து கவுண்டமணியும், செந்திலும் முதன் முதலாக இணைந்து நடித்த திரைப்படமான கோவைத் தம்பியின் “உதயகீதம்” திரைப்படத்தின் நகைச்சுவைப் பகுதிக்கான வசனங்களையும் ஏ வீரப்பனே எழுதியிருந்தார். கவுண்டமணி, செந்தில் ஆகிய இவ்விருவரின் உடல்மொழியையும் நன்குணர்ந்தவராக இவர் அமைத்துத் தந்த அப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற, தொடர்ந்து கவுண்டமணி, செந்தில் கூட்டணிக்காக ஏ வீரப்பன் எழுதித் தந்த நகைச்சுவைப் பகுதிகள் அடங்கிய அனைத்துத் திரைப்படங்களும் வெற்றித் திரைப்படங்களாகவே அமைந்திருந்தன.

“வைதேகி காத்திருந்தாள்”, “உன்னை நான் சந்தித்தேன்”, “இதயக் கோயில்”, “அமுதகானம்”, “கீதாஞ்சலி”, “பெரிய வீட்டுப் பண்ணக்காரன்”, “மருதுபாண்டி”, “கரகாட்டக்காரன்”, “சின்னத்தம்பி” என இவரது எண்ணத்திலும், எழுத்திலும் உருவான நகைச்சுவை பகுதிகள் அடங்கிய வெற்றித் திரைப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே இருந்தும் வந்தது.

நடிகர்களுக்காகவும், பாடல்களுக்காகவும் படங்கள் நன்றாக ஒடியதைத் தாண்டி, ஏ வீரப்பன் நகைச்சுவை வசனம் எழுதி, கவுண்டமணி, செந்தில் கூட்டணியில் உருவான நகைச்சுவைக் காட்சிகளுக்காகவும் திரைப்படங்கள் நன்றாக ஓடியிருக்கின்றன என்பதையும் யாரும் மறுக்க இயலாது. இவரது வசனம் பேசி நடித்து, புகழின் உச்சிக்குச் சென்ற நடிகர் கவுண்டமணி, செந்தில் ஆகியோரைப் போல் பணம், புகழ், செல்வாக்கு என பெரிய அளவில் உச்சம் தொடாமலேயே கலையுலகில் வாழ்ந்து மறைந்த ஒரு அற்புதமான திரைக்கலைஞர்தான் நகைச்சுவை நடிகர் ஏ வீரப்பன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !