மாரி செல்வராஜின் 'மஞ்சணத்தி' படப்பிடிப்பை தொடங்கி வைத்த இளையராஜா!
இயக்குநர் மாரி செல்வராஜின் ஆறாவது படமான 'மஞ்சணத்தி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் இணையும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் அவரது முதல் படமான 'பரியேறும் பெருமாள்' படத்தில் நாயகனாக நடித்த கதிர் மற்றும் பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, காக்கா முட்டை புகழ் ஜே. விக்னேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
நடிகர் கதிருக்கு, மாரி செல்வராஜூடன் இது இரண்டாவது படமாகும். மேலும், 'லிங்கம்' கிரைம் தொடருக்குப் பிறகு பூர்ணிமா ரவி மீண்டும் கதிருடன் இதில் இணைந்து நடிக்கிறார். இப்படத்தை மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் இணைந்து தங்களது நாவி ஸ்டுடியோஸ் சார்பிலும், சுஷாந்த் பிரசாத் தனது ஸ்கந்தா பிக்சர்ஸ் சார்பிலும் தயாரிக்கின்றனர். இதனுடன் பார்ச்சூன் நிறுவனமும் இணைந்து வழங்குகிறது.
மஞ்சணத்தி தவிர, மாரி செல்வராஜ் தனது முன்னாள் உதவி இயக்குநர் எஸ்.பி. அரவிந்த் இயக்கத்தில் அமீர் நடிக்கும் 'மாகாளி' படத்தையும் தயாரித்து வருகிறார். மேலும், இந்த மஞ்சணத்தி படப்பிடிப்பை இளையராஜா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்துள்ளார். அவருக்கு தனது இணையப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள மாரி செல்வராஜ், இப்படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.