காஷ்மீரில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும் கலவர பூமியாக இருந்த ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால் அமைதி திரும்பி உள்ளது. சுற்றுலாத்துறையும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளது. இந்த நிலையில் சர்வதேசத்தின் கவனத்தை பெரும் வகையில் ஜம்மு காஷ்மீரில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது.
இன்று தொடங்கும் இந்த விழா வருகிற 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவை ஜம்மு-காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாவில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், சினிமாத் துறை வல்லுநர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் கலந்துரையாடல்கள் மற்றும் சினிமா சார்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கிறது.
போட்டி பிரிவில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான சந்தோஷ் சிவன், ஜெர்மன் திரைப்படத் தயாரிப்பாளரும் கியூரேட்டருமான டோரதி வென்னர், ஜப்பானிய ஊடகத் தொழில்முனைவோரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான கெய்கோ பாங் மற்றும் தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கல்வியாளருமான ஹிமான்சு சேகர் கதுவா ஆகியோர் அடங்கிய சர்வதேச நடுவர் குழு சிறந்த படங்களை தேர்வு செய்கிறது.
திரைப்பட படப்பிடிப்புகள் மட்டுமே நடந்து வந்த காஷ்மீரில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது இந்திய சினிமாவின் மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.