உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சட்ட மாணவர் டூ மெகாஸ்டார் ; மம்முட்டியின் சினிமா பயணம்

சட்ட மாணவர் டூ மெகாஸ்டார் ; மம்முட்டியின் சினிமா பயணம்


கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்து, அருகிலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வளர்ந்தவர் நடிகர் மம்முட்டி. இவரின் நிஜப்பெயர் முகமது குட்டி. எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்றார். மலப்புரம் மாவட்டத்தில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் சினிமா ஆர்வம் காரணமாக நடிக்க வந்தார்.

1971ல் வெளியான 'அனுபவங்கள் பாளிச்சகள்' (“சிதைந்த அனுபவங்கள்”) என்ற திரைப்படத்தில் பெயர் குறிப்பிடப்படாத பாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து 1980களின் தொடக்கத்தில், 'மேளா' (1980; “நியாயம்”), 'அகிம்சா' (1981; “அகிம்சை”), 'யவனிகா' (1982; “திரை”), ' ஈ நாடு ' (1982; “இந்த நிலம்”), மற்றும் ' படயோட்டம் ' (1982; “போர் அணிவகுப்பு”) போன்ற மலையாள மொழித் திரைப்படங்களில் முக்கியத் துணைப் பாத்திரங்களில் நடித்தார்.

1983ம் ஆண்டு பின் அவர் சினிமா வாழ்க்கை பெரிதானது. அவர் நடித்த விசா, 'சந்த்யாக்கு விரிஞ்ச பூவு' (அந்திப் பொழுதில் மலர்ந்த மலர்)' கூடேவிடே?' (உன் கூடு எங்கே?) 'பின் நிலவு' (தேயும் நிலவொளி), 'ஆ ராத்திரி' (அந்த இரவு), மற்றும் 'இனியேன்கிலும்' (குறைந்தபட்சம் இப்பொழுது) போன்ற படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் குறிப்பிடத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினார். ஆரம்ப காலத்தில் மம்முட்டிக்கு சின்ன வேடங்கள், துணை கேரக்டர்களே கிடைத்தன.

1984க்குபின் அவர் சினிமா வாழ்க்கை மாறியது. அவர் ஹீரோவாக நடித்த படங்கள் வெற்றி பெற்றன. அதிராத்ரம் (1984; “இரவின் மரணம்”). அடியோழுக்குகள் (1984; “உள்நீரோட்டங்கள்”).'யாத்ரா' (1985; பயணம்) நியூ டெல்லி ' (1987). 'ஒரு சிபிஐ டைரி குறிப்பு 'ஜாக்ரதா: சிபிஐ டைரி பாகம் II ' ( மலையாளத்தில் ஜாக்ரதா என்றால் எச்சரிக்கை என்று பொருள்), ஒரு வடக்கன் வீரகதாவில் (வீரத்தின் வடக்கதை) படங்கள் வெற்றி படங்கள் ஆகின.

கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் மம்முட்டி. மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 425க்கும் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். ஒரு வடக்கன் வீரகதா படத்துக்கு முதல் தேசியவிருதையும், “பொந்தன் மாடா” மற்றும் “விதேயன்” என்ற திரைப்படங்களுக்காக மீண்டும் “தேசிய விருதையும் பெற்றார். “டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார்” திரைப்படம் மூன்றாவது தேசிய விருதையும் பெற்றார். இந்த மாதம் 'பிரம்மயுகம்' படத்துக்காக 4வது தேசியவிருதை பெற உள்ளார். இப்போதும் 'பேட்ரியாட் (Patriot), டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ், ஓம்' உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இன்று மம்முட்டிக்கு 75வது பிறந்தநாள்.

தமிழில் 20க்கும் அதிகமான படங்களில் மம்முட்டி நடித்து இருக்கிறார். அவர் நடிப்பில் இன்னும் மக்கள் மனதில் நிற்கும் டாப் 5 கதாபாத்திரங்கள்.

1) தேவா/ தளபதி

மணிரத்னம் இயக்கத்தில்,1991ல் வெளியான 'தளபதி' படத்தில் வரும் தேவா கேரக்டர் தமிழக ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. மகாபாரதத்தில் வரும் துரியோதனன் கேரக்டரின் தாக்கம்தான் அந்த கேரக்டர். அவர் மீது அன்பு வைத்திருக்கும் கர்ணன் மாதிரியான ரோலில் சூர்யா என்ற கேரக்டரில் ரஜினி வருவார். சட்டத்துக்கு புறம்பான தொழில்கள் செய்யும் தாதாவாக நடித்து இருந்தாலும் அவ்வளவு இயல்பாக நடித்து இருப்பார் மம்முட்டி. இயக்குனர் ஜோஷியின் 'குட்டேட்டன்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த மம்முட்டி முதலில் தளபதி படத்தை மறுத்ததாகவும், மணிரத்னம் போன்ற இயக்குனர் படத்தை தவற விடக்கூடாது என்று ஜோஷி சொல்லி நடித்ததாகவும் தகவல். இன்றைக்கு நட்பின் அடையாளமாக தேவா, சூர்யா கேரக்டர் பார்க்கப்படுகிறது.

2) அழகப்பன்/ அழகன்

மனைவியை இழந்த ஹோட்டல் அதிபர், நான்கு குழந்தைகளின் தந்தை அழகப்பன் கேரக்டர். ஆனால், அவரை கீதா, பானுப்பரியா, மதுபாலா என 3 பெண்கள் காதலிப்பார்கள். தனக்கே உரிய ஸ்டைலில் கே. பாலசந்தர் இயக்கிய படம். தலைப்புக்கு ஏற்ப, அவ்வளவு அழகாக இருப்பார் மம்முட்டி. சற்றே மலையாள வாடையுடன் டயலாக் பேசியிருந்தாலும் அதை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த படத்துக்குபின் தமிழில் மம்முட்டிக்கு பெண் ரசிகைகள் எண்ணிக்கை அதிகரித்தது. சங்கீத ஸ்வரங்கள் பாடலும், தூர்தர்ஷன் நிகழ்ச்சி முடிந்து, மீண்டும் தொடங்கும்வரை மம்முட்டியும்,பானுபிரியாவும் விடியவிடிய போனில் பேசிக்கொண்டிருக்கும் காட்சியும் அவ்வளவு பிரபலமானது.

3) திருப்பதி/ ஆனந்தம்

திருப்பதி பிரதர்ஸ் என்ற மளிகை கடை நடத்தும் மூத்த அண்ணன் திருப்பதிசாமியாக மம்முட்டி வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம். இயக்குனர் லிங்குசாமியின் முதல் படம். அவர் சொந்த வாழ்க்கையை தழுவி எடுத்த படம் என்பதால், அந்த கேரக்டருக்கு அவ்வளவு உயிர் கொடுத்து இருந்தார். நம் குடும்பங்களில் இப்படிப்பட்ட அண்ணன் இருக்க கூடாதா? நம் அண்ணனும் இப்படிப்பட்டவர்தானே என பலரை ஏங்க வைத்தது மம்முட்டியின் நடிப்பு.

4) மேஜர்பாலா/ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

ஐஸ்வர்யாராயை காதலிக்கும் கேரக்டர். ஆனால் அவரை விட வயது அதிகமானவர், ராணுவத்தில் ஒரு காலை இழந்தவர். இப்படி மாறுபட்ட கேரக்டரில் மம்மட்டியை நடிக்க வைத்தார் ராஜிவ்மேனன். அந்த படத்தில் அஜித், அப்பாஸ் என மற்ற இரண்டு நடிகர்கள் இருந்தாலும் மம்முட்டி கேரக்டர் பேசப்பட்டது. முதலில் இந்த கேரக்டரில் நடிக்க பார்த்திபன், அர்ஜூன் ஆலோசிக்கப்பட்டனர். அவர்கள் நடிக்க முடியாமல் போகவே மம்முட்டி கதைக்குள் வந்தார். ஸ்ரீவித்யாவை அவர் கண்டுபிடிக்கும் வாழைப்பூ வடை காட்சி இன்றும் பிரபலம்.

5) பேரன்பு

டீன் ஏஜ் மகளின் தந்தை, அதிலும் அந்த சிறுமி மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி. பாசக்கார அப்பாவாக அந்த பெண்ணை எப்படி வளர்க்கிறார். எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை அழுத்தமாக, உணர்வுபூர்வமாக சொல்லியிருப்பார் ராம். மகள் வீட்டுக்கு தூரமான சமயத்தில், தாய் ஸ்தானத்தில் சாணிட்டரி பேடு மாட்டிவிடும் ஒரு சீனில் அவரை தவிர வேறு யாரும் நடிக்க சம்மதித்து இருக்கமாட்டார்கள். அப்போது அவர் தவிக்கும் தவிப்பு அப்படியொரு எமோஷனான சீன். இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவில் அப்படி யாரும் நடித்ததில்லை என்று கூறப்பட்டது. அந்த படத்தில் அவர் நடித்திருந்த கேரக்டரை, நடிப்பை பார்த்தவர்கள் ரியல் மெகாஸ்டார் என கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !