சென்னையில் தான் இருக்கிறேன் : சர்தார் 2 பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது...
இந்த படத்தின் டீசரை பார்த்து இப்படி எல்லாம் தமிழில் படம் பண்ண முடியுமா? அட இது மித்ரன் படமா? நம்ம படமா ? என ஆச்சரியப்பட்டேன் . இந்த பட கதை பிரமிப்பு, ஒரு ஆச்சரியமும் கொடுக்குது. ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவியும், உண்மையாக நடந்த ஒரு விஷயத்தை வைத்தும் படம் உருவாகி உள்ளது.
ஒரு 50 வருஷத்துக்கு முன்னாடி இந்தியால இது நடந்திருக்கிறது. அதை நிகழ்த்திக் காமிச்சிருக்காங்க. அதுல இருந்து எடுத்த ஒரு கருதான் இப்படி வந்து இருக்குது. அதில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்குது. ஒரு ஸ்பை த்ரில்லர் கதையை தமிழில் ரீசன்டா இவ்வளவு தத்துரூபமா, இவ்வளவு உண்மையா, இவ்வளவு அழகா பார்த்தது கிடையாது. அது அமேசிங்.
என்னதான் படம் பண்ணி இருந்தாலும் இருந்தாலும் ஆடியன்ஸ் கிட்ட இன்னும் நெருக்கமாக எடுத்துட்டு போறதுன்னு பார்த்தால் அது எஸ்.ஜே.சூர்யா தான். ஒரு ஆக்டரை விட ஒரு கேரக்டர் இன்னும் பெருசா பேசப்படுது அப்படின்னா, ஒரு நடிகனுக்கு அது ஒரு பிளஸ்சிங். அது மாதிரி கார்த்தியை தாண்டி சர்தார்னு பேசுறாங்க. கார்த்தியால சர்தாராக வரமுடியுது, சர்தாராக நிக்க முடியுது. எல்லாரும் கார்த்திய சர்தாரா பார்க்கிறாங்க, இன்னும் படத்தை ஞாபகம் வச்சிருக்காங்க. இது எல்லாமே ஒரு நடிகனுக்கு வந்து ஒரு பிளஸ்சிங்கா பார்க்கிறேன்.
கார்த்தியால் என்னை விட முக்கியமான படங்கள் பண்ண முடியுது. அதை நான் ரசிச்சும், ஆச்சரியமாவும், சந்தோஷமாவும் பார்க்கிறேன். அதுல சர்தார் ஒரு முக்கியமான படமாக இருக்கும். செப்டம்பர் 10-ஆம் தேதி தியேட்டர்ல கொண்டாட்டமாக இருக்கப் போகுது.
எல்கேஜி, யூகேஜியில் இருந்து இந்த பட தயாரிப்பாளர் லட்சுமணன், கார்த்தி இரண்டு பேரும் பிரண்ட்ஸ். பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்து இருக்கிறார். நான் சென்னையில் தான் இருக்கேன், சென்னை வந்ததெல்லாம் போகல. மும்பைக்கு தான் போயிட்டு வந்துகிட்டு இருக்கிறேன்.
அமெரிக்காவில் இருந்து கார்த்தி வந்தபோது ஒரு அரிசி மூட்டை சைஸில் சிப்ஸ் பாக்கெட்டை அருகில் வைத்துக் கொண்டு சாப்பிட்டுகிட்டு இருந்தார். ஆனால் பருத்திவீரன் படத்துல ஆளே மாறினார். நான் ஆச்சரியப்பட்டுவிட்டேன். பலரும் என்னிடம் வந்து கார்த்தி பத்தி, அவர் படங்கள் குறித்து பெருமையாக பேசுவாங்க..அப்ப நான் அண்ணனாக இல்லாமல், அப்பாவாக நினைத்து கொள்வேன்.
இவ்வாறு சூர்யா பேசினார்.