கீது மோகன்தாஸ் எடுத்த படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை : பார்வதி நழுவல் பேச்சு
மலையாள நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான 'டாக்சிக்' திரைப்படம் பெண்களை மிகவும் தரகுறைவாகக் காட்டியுள்ளதாக சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாகவே படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை.
இதேபோல, கடந்த சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடித்த 'கசபா' படத்தில் பெண்களை இழிவுபடுத்துவது போன்ற வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றதாக ஒரு பொது மேடையில் பேசிய நடிகை பார்வதி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அந்தப் படத்தின் பெயர் குறித்து அவர் வெளிப்படுத்த தயங்கி நின்றபோது, அருகில் அமர்ந்திருந்த கீது மோகன்தாஸ் தான் 'கசபா' என்ற பெயரைச் சொல்லும்படி பார்வதியை உற்சாகப்படுத்தினார். அதன்பிறகே 'கசபா' என்று வெளிப்படையாக பெயரை சொன்னார் பார்வதி. இதனால் நெட்டிசன்களிடம் கடும் விமர்சனத்தையும் சந்தித்தார்.
இந்த நிலையில், பார்வதியின் தோழியான கீது மோகன்தாஸ் எடுத்துள்ள டாக்சிக் படமும் இப்படி பெண்களுக்கு எதிரான படமாக விமர்சனங்களை சந்தித்து வருவது குறித்து சமீபத்தில் பார்வதியிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறும் போது, அப்போது நான் என்ன சொன்னேனோ அது எனது சொந்தப் பார்வை. கீது மோகன்தாஸ் அதை ஒருபோதும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. அவருக்குப் பிடித்த படங்களை இயக்குவதற்கு அவருக்கு முழு சுதந்திரம் உண்டு. நான் கீதுவின் அருகில் அமர்ந்து எனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக, அவர் இயக்கும் ஒவ்வொரு படமும் நான் சொன்னதை பிரதிபலிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
தனது தோழி என்பதாலேயே டாக்சிக் படம் குறித்து பார்வதி இப்படி நழுவலாகப் பதிலளித்துள்ளார் என்று நெட்டிசன்கள் இப்போதும் பார்வதியை விமர்சித்து வருகின்றனர்.