தடை விலகியது : பம்பையில் துவங்கிய மோகன்லாலின் அதிமனோகரம் படப்பிடிப்பு
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'தொடரும்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் தற்போது மீண்டும் 'அதிமனோகரம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இதில் சபரிமலையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், பெரியார் புலிகள் சரணாலயம் சில காரணங்களால் அங்கே படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
அதேசமயம், படக்குழுவினர் கேரளா உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிட்டு அனுமதி கேட்டிருந்தனர். உயர்நீதிமன்றமும் சில நிபந்தனைகளுடன் பம்பை மற்றும் நிலக்கல் பேருந்து நிலைய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்றும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமலும் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்கிற அறிவுறுத்தலுடனும் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது பம்பை பகுதியில் 'அதிமனோகரம்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.