பிரபு தேவா, வடிவேலு கூட்டணியின் ‛பேங் பேங்' டீசர் வெளியீடு
கண்ணன் ரவி தயாரிப்பில் சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் படம் “பேங் பேங்”. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிப்பதே கதையாக இருக்கும் என்பது தெரிகிறது. ஜாம்பிகள், எரிமலை, ஆபத்தான சூழல் என ஒரு பக்கம் பதற்றத்தை உருவாக்கினாலும், வடிவேலுவின் உடல்மொழி ரசிக்க வைக்கிறது. பிரபு தேவா மற்றும் வடிவேலு கூட்டணி 25 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்திருப்பதால், “பேங் பேங்” படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்தோனேசியாவின் மவுண்ட் ப்ரோமோ எரிமலைப் பகுதி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் டிரைலர், ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது.