உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிப்பிலும், நடனத்திலும் மகாராணி... நவரசங்களை தந்த ‛நாட்டியத் தாரகை' வைஜெயந்திமாலா

நடிப்பிலும், நடனத்திலும் மகாராணி... நவரசங்களை தந்த ‛நாட்டியத் தாரகை' வைஜெயந்திமாலா

நடிகை, பரதக் கலைஞர், கர்நாடக இசைப் பாடகி, நடன வடிவமைப்பாளர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்டவர் நடிகை வைஜெயந்திமாலா(93). நடனத்திலும், நடிப்பிலும் நவரசங்களை தந்த ‛நாட்டியத் தாரகை' இவர். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‛பத்ம விபூஷண்' விருது பெற்ற இவருக்கு இன்று 93வது பிறந்தநாள். அவரை பற்றிய ஒரு சின்ன ரீ-வைண்ட் ....

சென்னை, திருவல்லிக்கேணியில் 1933, ஆக., 13ம் தேதியான இதே நாளில் பிறந்தார் வைஜெயந்திமாலா. இவரது தாயார் வசுந்தரா தேவி பிரபலமான தமிழ் நடிகையாகவும், பரதநாட்டியக் கலைஞராகவும் திகழ்ந்தார். 13 வயதில் ஆரம்பமானது வைஜெயந்தியின் முதல் நாட்டிய அரங்கேற்றம். இவரது நாட்டியத்தை கண்டு அசந்து போன ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தான் இயக்கிய வாழ்க்கை திரைப்படத்தில் இவரை நாயகியாக ஒப்பந்தம் செய்தார். முதல்படமே மிகப் பெரிய வெற்றி கண்டது.

இந்த படம் தெலுங்கிலும் ஜீவிதம் என்ற பெயரில் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஹிந்தியில் ‛பாஹர்' என்ற பெயரில் ரீ-மேக் ஆனது. ஹிந்தியிலும் வரவேற்பை பெற்றதோடு வைஜெயந்திமாலாவின் நடிப்பும், நாட்டியமும் வட இந்தியர்களை வெகுவாக ஈர்த்தது. அதன்பின் கின், நியூ டெல்லி, நயா தௌர், கட்புத்லி, ஆஷா, சாத்னா, மதுமதி என தொடர்ந்து ஹிந்திப் பட வாய்ப்புகள் கிடைத்து அங்கும் உச்ச நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ராஜபக்தி, பார்த்திபன் கனவு, இரும்புத்திரை, பாக்தாத் திருடன், தேன்நிலவு, வஞ்சிக்கோட்டை வாலிபன், சித்தூர் ராணி பத்மினி'' என விரல் விட்டு எண்ணும் வகையில் தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தாலும் இன்றும் தமிழ் ரசிக நெஞ்சங்களில் இவருக்கென்று ஒரு தனி இடம் உண்டு.

மறக்க முடியாத வஞ்சிக்கோட்டை வாலிபன்
ஜெமினி தயாரிப்பில் வெளியான படம் வஞ்சிக்கோட்டை வாலிபன். எஸ்எஸ் வாசன் இயக்கிய இப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி, வைஜெயந்திமாலா நடித்தனர். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற போட்டி நடனப் பாடலான கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுது என்ற பாடலில் ஜிலு ஜிலு ஜிலுவென நானே என்று இவர் நடனமாடும் காட்சியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது. தலைமுறைகளைக் கடந்து இன்றும் அப்பாடலுக்கு ரசிகர்களிடம் ஒரு தனி இடம் இருக்கிறதென்றால் அது காட்சியில் தோன்றி மின்னிய வைஜெயந்திமாலா, பத்மினி என்ற அந்த இருவரையே சாரும்.

அரசியலிலும் வெற்றி
1968ல் டாக்டர் சமன்லால் பாலியை காதல் மணம் புரிந்த இவர் திருமணத்திற்குப் பின் திரையுலகை விட்டு விலகினார். 1984ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1989ல் நடந்த தேர்தலிலும் வென்றவர், பின்னர் 1993ல் ராஜ்யசபா எப்பியாக தேர்வாகி பொறுப்பு வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !