டிஜிட்டல் உலகில் பிரபலங்கள் கேலிகளை சந்திக்கும் சூழல்: நீதிமன்றம் வருத்தம்
சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு சமூகத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும், அடுத்த நிமிடமே அது உள்ளங்கைகளுக்கு வந்தது. யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லும் பலமான மேடையை உருவாக்கி தந்தது. அதே நேரத்தில் அந்தரங்கத்தையும், தனிமையையும் அது பறித்தது.
சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் அடுத்த கட்டமாக ஏஜ தொழில்நுட்பம் எளிமையாகிவிட்ட பிறகு நடக்காத ஒன்றை நடந்ததாக சித்தரிப்பது பிரபலங்களை பெரும் பாதிப்புள்ளாக்கி வருகிறது.
பிரபல நடிகைகளின் முகங்களை பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உருவாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துத் வருகின்றன. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், மிருணாள் தாக்கூர், பிரீத்ரீ ஜிந்தா, தபு உள்ளிட்டட் பலரின் முகங்களை பயன்படுத்தி டீப்-பேக் உள்ளடக்கங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளன.
இதனால் அவர்களின் தனிமனித உரிமையும், நற்பெயரும் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல நடிகைகள் நீதிமன்றம் சென்றுள்ளனர். நீதிமன்றம் அவற்றை நீக்க உத்தரவிட்டாலும் அது இன்னொரு வடிவத்தில் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது பெயர், புகைப்படம், உருவ அமைப்பு மற்றும் நற்பெயரை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கம்போல ஜான்வி கபூரின் உருவத்தை தவறாக பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆபாச ஏஐ, டீப் பேக் உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதோடு இது தொடர்பான சில கருத்துக்களை நீதிமன்றம் வருத்தத்துடன் கூறியுள்ளது. “நடிகையின் பெயர் மற்றும் உருவத்தை பயன்படுத்தி தவறான முறையில் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களால் அவரது தனியுரிமை மற்றும் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. ரசிகர் பக்கங்களுக்கு முழுமையான தடை இல்லை. அதே நேரத்தில், ரசிகர்கள் உருவாக்கும் பக்கங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் ஒரே மாதிரியாக தடை செய்ய முடியாது. டிஜிட்டல் உலகில் பிரபலங்கள் விமர்சர்னங்களையும், கேலிகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது” என்று நீதிமன்றம் வருத்தத்துடன் கூறியிருக்கிறது.