பிளாஷ்பேக்: விக்ரமை நடிகராக்கிய இந்தியன் வங்கி ஊழியர்கள்
விக்ரம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் விளம்பர படங்களில் நடித்து வந்தார். அதோடு 'கலாட்டா குடும்பம்' என்ற, தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். இந்த நேரத்தில் இந்தியன் வங்கி ஊழியர்கள் சிலர் இணைந்து சிறிய பட்ஜெட்டில் பரிசோதனை முயற்சியாக ஒரு படம் தயாரிக்க முன்வந்தனர். ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அவர்கள் தயாரித்த படம்தான் 'என் காதல் கண்மணி'.
இதனை டி.ஜே.ஜாய் என்பவர் இயக்கினார். படத்தில் நடிக்க நடிகர் தேடியபோது விக்ரம் நடித்து வந்த தொலைக்காட்சி தொடரை பார்த்து அவரை தேர்வு செய்தனர். விக்ரம் ஜோடியாக ரேகா நம்பியார் என்ற புதுமுகம் நடித்தார். இவர்களுடன் வி.கே.ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, கோவை சரளா, எஸ்.எஸ்.சந்திரன் லூஸ் மோகன், கல்லாபெட்டி சிங்காரம் உள்ளிட்ட பலர் நடித்தனர். எல்.வைத்தியநாதன் இசை அமைத்தார்.
குடிக்கு அடிமையான விக்ரம், ஒரு காதல் வந்ததும் எப்படி அந்த பழக்கத்தில் இருந்து மீள்கிறார் என்பதுதான் கதை. இந்த படம் தோல்வி அடைந்ததால் விக்ரமிற்கு தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை. படத்தில் அறிமுகமான ரேகா நம்பியாரும் இந்த படத்தோடு காணாமல் போய்விட்டார்.