ஓடிடிகளின் கெடுபிடி! ரிலீஸ் தேதிகளால் நெருக்கடியில், பிரபாஸ்- நானி படங்கள்!
சமீபகாலமாக ஓடிடி தளங்கள், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகின்றன. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ 5 மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள், டிஜிட்டல் உரிமைகளுக்கான தொகையைக் குறைத்தது மட்டுமின்றி, ஒப்பந்தம் செய்த வெளியீட்டுத் தேதிகளிலேயே படங்களை வெளியிட வேண்டும் என்றும் தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருகின்றன.
குறிப்பாக, தெலுங்கில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிக்கும் ‛தி பாரடைஸ்' என்ற படத்தை முதலில் மார்ச் 2026ல் வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஆகஸ்ட் 21, 2026 புதிய வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சினிமா துறையில் இது இயல்பான ஒன்றுதான். ஆனால் தற்போது இப்படத்தின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய ஓடிடி நிறுவனம், படத்தை டிசம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்தால், ஏற்கனவே பேசப்பட்ட தொகையில் 10% முதல் 15% வரை குறைக்கப்படும் என தயாரிப்பாளரிடம் கூறிவிட்டது. இதன் காரணமாக, படக்குழுவினர் படப்பிடிப்பை வேகப்படுத்தி, ஆகஸ்ட் 6ம் தேதி டீசரை வெளியிட்டு விளம்பரப் பணிகளைத் தொடங்கவுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த தி பாரடைஸ் படம் செப்டம்பர் கடைசி வாரத்தில் திரைக்கு வரும் என தெரிகிறது. டீசருடன் புதிய வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதையடுத்து, பிரபாஸ் நடிக்கும் ‛பெளசி' படம் 2027ம் ஆண்டிற்குத் தள்ளிப்போகலாம் என செய்திகள் பரவின. இப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றியுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், திட்டமிட்டபடி டிசம்பர் 2026க்குள் படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்றும், தவறினால் ஒப்பந்தத் தொகையில் 20% குறைக்கப்படும் என்றும் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தயாரிப்பாளர்கள் எப்பாடு பட்டாவது வருகிற டிசம்பர் 3 அன்றே படத்தை திரையரங்குகளுக்குக் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் பிசினஸில் ஓடிடி ஒப்பந்தம் மிக முக்கியமானது என்பதால், படம் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் இந்த பெளசி படத்தில் பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.