உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: பிரதியின்றி அழிந்துபோன ஜெமினிகணேசன் - சாவித்ரி ஜோடியின் முதல் திரைப்படம்

பிளாஷ்பேக்: பிரதியின்றி அழிந்துபோன ஜெமினிகணேசன் - சாவித்ரி ஜோடியின் முதல் திரைப்படம்


“தேவதாஸ்” என்ற வெற்றித் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு, சொந்த ஊருக்குச் சென்றிருந்த நடிகை சாவித்ரிக்கு புதிய படம் ஒன்றில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்தது இயக்குநர் பி புல்லையாவின் மூலம். அதற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட நடிகை சாவித்ரிக்கு, படத்தின் உதவி இயக்குநரும், திரைக்கதாசிரியருமான கே வி சீனிவாசன் அவருக்கு தினமும் தமிழ் கற்றுக் கொடுத்து வந்தார். ஒரு நாள் தமிழ் பாடத்தின்போது, அங்கு வந்த ஆர் கணேஷ் என்பவரைக் காட்டி, இவர்தான் நாம் எடுக்க இருக்கும் திரைப்படத்தில் உன் காதலன் என்றார் கே வி சீனிவாசன். “நாராயணன் கம்பெனி” என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்த “மனம்போல மாங்கல்யம்” என்ற இந்த திரைப்படத்தில்தான் ஆர் கணேஷ் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த நடிகர் ஜெமினிகணேசனும், நடிகை சாவித்ரியும் முதன் முதலாக இணைந்து நடித்திருந்தனர்.

“கலையின் உருவே! எங்கள் காணிக்கை இதுவே! மனம்போல் மாங்கல்யமே - வாய்த்த பேருக்கு வாழ்வெல்லாம் வைபோகமே! என்ற இப்படத்தின் டைட்டில் பாடல் போலவே படத்தில் ஜெமினிகணேசன் - சாவித்ரி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் இளமையோடும், நெருக்கத்தோடும் இணைந்த ஒரு இயல்பான அழகியலோடு அமைந்திருந்தது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே ஜெமினி ஸ்டூடியோவில் காஸ்டிங் அஸிஸ்டெண்டாக நடிகர் ஜெமினிகணேசன் வேலை பார்த்து வந்த போதே நடிகை சாவித்ரியை சந்தித்திருக்கின்றார். அவருக்காக சிபாரிசும் செய்திருக்கின்றார். பின்னர் “மனம்போல மாங்கல்யம்” படப்பிடிப்பின்போது இவ்விருவருக்கும் இருந்து வந்த அந்த நட்பு அதிகமாகி, தங்கள் மனங்களையும் பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமானது. “மனம்போல மாங்கல்யம்” என்ற இந்தப் படத்தின் டைட்டில் போலவே, படத்தின் நாயகன் நாயகியாக நடித்திருந்த நடிகர் ஜெமினிகணேசனும், நடிகை சாவித்ரியும் பின்னாளில் இல்லறம் என்ற நல்லறம் கண்டு, நிஜ வாழ்விலும் மனமொத்த தம்பதியராகவும் மாறினர்.

இந்தப் படத்திற்குப் பின்னர் ஜெமினிகணேசன் - சாவித்ரி இணை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போனது. இவ்விருவரும் இணைந்து நடித்த வெற்றித் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒன்றல்ல, இரண்டல்ல ஏராளம்! மேலும் நடிகர் ஜெமினிகணேசன் இரட்டை வேடமேற்று நடித்த முதல் திரைப்படமாகவும் பார்க்கபட்ட திரைப்படம்தான் இந்த “மனம்போல மாங்கல்யம்”. இயக்குநர் பி புல்லையா இயக்கத்தில், உமாசந்திரன் மற்றும் கே வி சீனிவாசன் ஆகியோரது திரைக்கதையில் உருவான இத்திரைப்படம் 1953ம் ஆண்டு நவம்பர் 5 அன்று வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாக வெற்றியும் பெற்றது. ஏ ராமாராவ் இசையமைப்பில் படத்தின் பாடல்களும் நன்றாகவே அமைந்திருந்தது.
குறிப்பாக பின்னணிப் பாடகர் ஏ எம் ராஜா மற்றும் பி லீலா குரல்களில் வந்த “மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய், மணியான மதராஸூ மாப்பிள்ளை டோய், மை லேடி டோய், மை லேடி டோய், மனம் போலே வந்து வாய்ச்ச பெண் ஜோடி டோய்” என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பாடலக இருந்து வருகின்றது என்பது இசையை நேசிக்கும் அனைவரும் அறிந்ததே. இத்தனைச் சிறப்புகளைக் கொண்ட இத்திரைப்படத்தின் பிரதி ஏதும் இன்று எஞ்சியிருக்க வாய்ப்பில்லை என்ற செய்தியை நாம் கேட்கும்போது மனம் வலிக்கத்தான் செய்கின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !