தமிழில் உருவாகும் இயேசுநாதர் வாழ்க்கை கதை
கிறிஸ்தவ மத பிரமுகர் ரூபர்ட் ரகுநாதன் என்பவர் இயேசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை 'பிரஜாபதி' என்ற பெயரில் நாடகமாக நடத்தி வந்தார். தற்போது இந்த நாடகத்தை திரைப்படமாக இயக்கி வருகிறார். நாடகத்தில் நடித்தவர்களே படத்திலும் நடிக்கிறார்கள். கிரவுட் பண்டிங் முறையில் இந்த படம் தயாராகிறது.
இந்த படத்தின் அறிமுக நிகழ்வில் சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் படம் குறித்து இயக்குநர் ரூபர்ட் ரகுநாதன் பேசியதாவது:
இந்த திரைப்படத்தை எடுக்க வேண்டிய நோக்கம் என்னவென்றால், கடந்த 25 ஆண்டுகளாக 'பிரஜாபதி' என்ற இந்த கதையை நாடகமாக மேடையேற்றி வந்திருக்கிறோம். முதலில் அரை மணி நேர நாடகமாக ஆரம்பித்தது. பின்னர் அது வளர்ந்து மூன்று மணி நேர நாடகமாக மாறியது. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் இந்த நாடகத்தை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தி வந்திருக்கிறோம். சினிமா என்பது மிகவும் சக்திவாய்ந்த ஊடகம். அதனால் இந்த நாடகத்தை திரைப்படமாக உருவாக்கும் பணியில் இறங்கியிருக்கிறோம்.
“பிரஜாபதி” என்பது ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மட்டும் சித்தரிக்கும் திரைப்படமல்ல. மனிதகுலம் முழுவதற்கும் தேவன் அருளிய அன்பு, கிருபை, இரக்கம் மற்றும் இரட்சிப்பின் மகத்துவத்தை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் ஆன்மீகப் படைப்பாக இது உருவாகி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.